கைப் பை கொள்ளை, கொலை : கைது செய்த வேளையில் தாக்க முயன்ற சந்தேகநபர் சூட்டில் பலி - உதவி, ஒத்தாசை புரிந்த மனைவி கைது - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

கைப் பை கொள்ளை, கொலை : கைது செய்த வேளையில் தாக்க முயன்ற சந்தேகநபர் சூட்டில் பலி - உதவி, ஒத்தாசை புரிந்த மனைவி கைது

பெண் ஒருவரின் கைப் பையை கொள்ளையடித்து, இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபரை கைது செய்யச் சென்ற வேளையில் குறித்த நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரவிட்ட பிரதேசத்தில் பெண் ஒருவரின் கைப்பையை கொள்ளையிட முயன்ற வேளையில் அதனை தடுக்க முயன்ற இருவர் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்தில் கைப் பையுடன் சென்ற பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கொட்டுகொட, மதுருவிட்ட பிரதேசத்திலுள்ள நிர்மாணப் பணிகள் நிறைவு பெறாத கட்டடமொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, நேற்றையதினம் (29) இரவு கைது செய்யச் சென்ற வேளையில், சந்தேகநபர் கத்தியால் பொலிஸார் மீது தாக்கியுள்ள நிலையில், பொலிஸார் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொள்ளை சம்பவத்தில் குறித்த நபருடன் மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்து வந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு ஒத்துழைத்த அவரது மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில், கம்பஹா, பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான சந்தேகநபர் மரணமடைந்துள்ளதோடு, 26 வயதான அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் போதைப் பொருளுக்கு மிக அடிமையானவர்கள் எனவும், மரணமடைந்த சந்தேகநபர் மீது கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள், கம்பஹா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ், கம்பஹா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment