(இராஜதுரை ஹஷான்)
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது. ஆகையால் பெற்றுக் கொண்ட அரசமுறை கடன்களை மீளச் செலுத்த முடியாது என அரசாங்கம் சர்வதேசத்துக்கு அறிவித்தமை முட்டாள்த்தனமானதொரு தீர்மானமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்காமல் இருப்பது மிக பெரிய துரோகமாகும் என இலங்கை கம்யூனிச கட்சியின் உப தலைவர் டி.யு.குணசேகர தெரிவித்தார்.
இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என குறிப்பிடுவதை மறுக்க முடியாது.
தவறான பொருளாதார முகாமைத்துவம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் எடுத்துரைத்த போது பொருளாதார பாதிப்பு ஏதும் ஏற்படாது. இவர்கள் அமைச்சரவையில் இருந்தால் நான் அமைச்சரவைக்கு வருகை தர மாட்டேன் என முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிறுபிள்ளை போல் அடம்பிடித்ததை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவியில் இருந்து விலக்கினார்.
பொருளாதார நெருக்கடி இறுதியில் அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து எவரும் எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொடுத்தது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் இதுவரை பொருத்தமான நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.
விவசாயத்துறை வீழ்ச்சியடைந்தால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது, விவசாயத்துறையை மேம்படுத்த அரசாங்கம் எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மாறாக பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இறக்குமதி துறைமை மாத்திரம் அரசாங்கம் நம்பியிருக்கிறது.
நாடு வங்குரோத்து அடைந்து விட்டது, ஆகையால் எமக்கு அரசமுறை கடன்களை மீளச் செலுத்த முடியாது என அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தமை முட்டாள்த்தனமான தீர்மானமாகும் என்றார்.
No comments:
Post a Comment