(இராஜதுரை ஹஷான்)
இறந்த தாயின் சடலத்தை நடு வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டம் விளையாடுவதை போன்று அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திக் கொண்டு பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபை வலுவற்றதாகும். ஆகவே பயனற்ற தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை என மேலவை இலங்கை கூட்டணியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் கட்சிகள் அனைத்தும் பொது கொள்கையின் அடிப்படையில் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.
சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னர் தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக சர்வ கட்சி அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி முன்வைத்தோம்.
முன்னாள் ஜனாதிபதிக்கும், தற்போதைய ஜனாதிபதிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாமல் போயுள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை விடுத்து அரசாங்கம் பொருப்பற்ற வகையில் செயற்படுகிறது. பொருளாதார நெருக்கடி மனித வள அனர்த்தமாக வியாபித்துள்ளமை அவதானத்துக்குரியது.
தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு பலமுறை எடுத்துரைத்தும் அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பல யோசனைகளை முன்வைத்தோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாத காரணத்தினால் சமூகத்தின் மத்தியில் காணப்படும் பிரச்சினை நாளுக்குநாள் தீவிரமடைந்து செல்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை செயற்படுத்தவில்லை.
இறந்த தாயின் சடலத்தை நடு வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டம் விளையாடுவதை போன்று அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபை அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையின் பிறிதொரு வெளிப்பாடாக உள்ளது. பெயரளவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபைக்கு மேலவை இலங்கை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment