இலங்கை மக்கள் போசனை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் - விவசாயத்துறை அமைச்சு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

இலங்கை மக்கள் போசனை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் - விவசாயத்துறை அமைச்சு எச்சரிக்கை

(இராஜதுரை ஹஷான்)

விலங்குணவு உற்பத்தி பாதிப்பினால் பால் உற்பத்தி 19 சதவீதத்தினாலும், கோழி இறைச்சி உற்பத்தி 13 சதவீதத்தினாலும், முட்டை உற்பத்தி 34 சதவீத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதால் நடுத்தர மக்கள் போசனை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்தார்.

உணவு தட்டுப்பாடு தொடர்பில் தனியார் தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு விவசாயத்துறை அமைச்சிற்கும், விவசாயத்துறையுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கும் உண்டு.

2021ஆம் ஆண்டு விவசாயத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தவறான தீர்மானத்தை விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் திருத்திக் கொள்ள விடயதானங்களுக்கு உட்பட்ட வகையில் இருந்துகொண்டு முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து சுய விருப்பத்துடன் விலகினேன்.

உணவு தட்டுப்பாடு தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினர் பல விடயங்களை குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

தரவு மற்றும் எதிர்வு கூறல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவுத் தட்டுப்பாட்டின் பாரதூரத்தன்மையை மதிப்பிட முடியும்.

நாட்டின் விவசாயத்துறை மோசமான நிலையினை எதிர்கொண்டுள்ளது என்பதை சகல தரப்பினரும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பெரும்போகம் மற்றும் சிறுபோகம் ஆகிய விவசாய பயிர்ச் செய்கையில் நெற்பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு 51 இலட்சத்து 20ஆயிரம் மெற்றிக் தொன் நெற் செய்கை கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து அக்காலத்தில் அரிசி உற்பத்தி சுமார் 39 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி விளைச்சலாக கிடைக்கப் பெற்றது. 2021ஆம் ஆண்டு 33 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி விளைச்சலாக கிடைக்கப் பெற்றுள்ளது.

ஒரு மாதத்திற்கு சுமார் 2 இலட்சம் மெற்றிக் தொன் அரிசிக்கான கேள்வி காணப்படுகிறது விவசாயத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் சிறுபோக விவசாயத்தின் நெற் பயிர்ச் செய்கையின் விளைச்சல் 16 இலட்சம் மெற்றிக் தொன்னாக மட்டுப்படுத்தப்படும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

சிறுபோக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் காலம் எதிர்வரும் மாதம் 05ஆம் திகதியுடன் நிறைவு பெறும்.

சிறுபோகத்தில் 6.4 இலட்சத்து ஹெக்டயார் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தற்போது உரம் மற்றும் எரிபொருள் கிடைப்பனவிற்கான சிக்கல் நிலைமை காணப்படும் பின்னணியில் சிறுபோக விவசாயத்திற்காக 3.57 இலட்சத்து ஹெக்டயார் நிலப்பரப்பு மாத்திரம்தான் விவசாயத்திற்காக பதப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்துறை பாதிப்பினால் விலங்குணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 4 இலட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் விளைச்சல் கிடைக்கப் பெற்றது. 2022ஆண்டு சோள விளைச்சல் 1 இலட்சத்து 19 மெற்றிக் தொன்னாக வீழ்ச்சியடைந்துள்ளது.

விலங்குணவு உற்பத்தியின் பாதிப்பினால் பால் உற்பத்தி 19 சதவீதத்தினாலும், கோழி இறைச்சி உற்பத்தி 13 சதவீதத்தினாலும், முட்டை உற்பத்தி 34 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதால் நடுத்தர மக்கள் போசனைசார்ந்த பிரச்சினைகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment