(எம்.எப்.எம்.பஸீர்)
ரஷ்யாவின் 'ஏரோஃப்ளோட் (Aeroflot) ' விமானம் இலங்கையில் இருந்து வெளியேறத் தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி ரஷ்யா - இலங்கை உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
தனது விமானம் தடுத்து வைக்கப்பட்டமைக்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவர் ஜனிதா லியனகே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு நேரில் அவரிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் கொழும்பிற்கான தனது வணிக விமான பயணங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தியுள்ளது.
இலங்கையில் தனது விமானங்கள் தடையின்றி பறப்பதை உறுதி செய்ய முடியவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்கும் விமானங்களுக்கான விமானச் சீட்டு விற்பனையும் இதனால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏரோஃப்ளோட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் சனிக்கிழமை (4) ரஷ்யாவிலிருந்து கொழும்பு நோக்கி 275 பயணிகளுடன் வரவிருந்த விமானம் தனது பயணத்தை ரத்து செய்துள்ளது.
எனினும் ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான மற்றொரு விமானம் எந்த பயணிகளையும் ஏற்றாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று முற்பகல் 10.10 மணியளவில் வந்தடைந்ததுடன், அவ்விமானம் ரஷ்யா நோக்கி ஏரோஃப்ளோட் விமான சேவை ஊடாக செல்ல தயாராக இருந்த ஒரு தொகை பயணிகளை அழைத்துக் கொண்டு பிற்பகல் 12.50 மணிக்கு ரஷ்யா நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் சில ரஷ்ய பயணிகளை அழைத்துச் செல்ல ஞாயிற்றுக்கிழமை (5) மற்றொரு விமானம் முற்பகல் 10.10 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடையவுள்ளது.
இலங்கைக்கு வாராந்தம் ஏரோஃப்ளோட் விமான சேவை ஊடாக 3 விமான போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனூடாக பெருமளவான சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கை வருகின்றனர்.
வியாழன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இவ்வாறு விஷேட விமான சேவைகள் ரஷ்யாவிலிருந்து வாராந்தம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது அச்சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலைமையானது ராஜதந்திர ரீதியிலான விரிசலை நோக்கி நகர்வதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா - உக்ரேன் போர் சூழலில், ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய விமான நிலையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய விமானங்கள் பலவும் ஐரோப்பாவின் நிறுவனங்களின் கீழ் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிவதுடன், அந்த குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறித்த நிறுவங்கள் விமானங்களுக்கு உரிமை கோருகின்றன.
இவ்வாறான பின்னணியில் இலங்கையின் விமான நிலையங்களில் ரஷ்ய விமானங்கள் கைப்பற்றப்படமாட்டாது என இலங்கை ரஷ்யாவுக்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
இவ்வாறான சூழலில், நீதிமன்றின் தடை உத்தரவால் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏரோஃப்ளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விமான நிலையமம் மற்றும் விமான சேவை நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
ஏரோஃப்ளோட் விமான சேவை நிறுவனம் மற்றும் அயர்லாந்து நிறுவனத்திற்கு இடையே வணிகப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ரஷ்யாவின் 'ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக நேற்றுமுன்தினம் (3) இலங்கை அதிகாரிகள் சார்பில் நீதிமன்றில் ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டன.
அதன்படி, குறித்த விமானம் வெளியேற விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கி உத்தரவிடுமாறு, இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பயண கட்டுப்பாட்டாளருக்காக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமத்தி தர்மவர்தன மன்றில் வாதிட்டார்.
இந்நிலையில் அந்த தடையை நீக்குவதா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுப்பதாக நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ( 3) அறிவித்தது.
மனுவின் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பயண கட்டுப்பாட்டாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்து கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் (Celestial Aviation Trading Limited) தாக்கல் செய்த முறைப்பாடொன்றினை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அம்மனுவின் முதல் பிரதிவாதியான ஏரோஃப்ளோட் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு (Aeroflot Russian Airlines) கடந்த 2 ஆம் திகதி தடையுத்தரவொன்றினை பிறப்பித்தது.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க உத்தரவிட்டிருந்தார். இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிபதி அறிவித்தார்.
அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட், ஏரோஃப்ளோட் ரஷியன் ஏர்லைன்ஸுக்கு எதிராக, இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாக கூறி இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்து இந்த தடை உத்தரவைப் பெற்றுக் கொண்டிருந்தது.
இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் (03) நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த விவகாரம் தொடர்பிலான முறைப்பாடு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பயண கட்டுப்பாட்டாளருக்காக அரசின் மேலதிக சொலிசிடர் ஜெனரால் சுமதி தர்மவர்தன, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மஹேன் கொபல்லாவ, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக ஆகியோருடன் மன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகளுக்கமைய சர்வதேச விமானங்களுக்கு இலங்கையில் தரையிறங்க, வெளியேற தேவையான வசதிகளை செய்துகொடுக்க இலங்கை அரசுக்கு பொறுப்புள்ளதாக மேலதிக சொலிசிடர் ஜெனரால் சுமதி தர்மவர்தன மன்றில் சுட்டிக்காட்டினார்.
'தரையிறக்கப்படும் விமானங்கள் மீள செல்லுவதற்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பது சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளருக்கு சட்டத்தின் ஊடாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டபூர்வ விதிகளை தவறாகக் காட்டி, மனுதாரரான செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் இந்தத் தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து சட்டத்தின்படி, இரண்டாவது பிரதிவாதியான விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், இலங்கையின் எல்லைக்குள் விமானம் புறப்படுவதைத் தடுப்பதற்கு முதல் பிரதிவாதியான ஏரோஃப்ளோட் ரஷ்ய விமான நிறுவனத்துக்குத் தடை விதிக்க அதிகாரம் இல்லை.
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தொடர்பான தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள சட்டம், சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு பொது அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வ கடமைகளுக்கு உட்பட்டது.
எனவே இவ்வாறான தடையுத்தரவு ஒன்றினை பிறப்பிக்க நீதிமன்றிற்கு அதிகாரமில்லை. நேற்றுமுன்தினம் (03 ஆம் திகதி) நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததன் பின்னர் நீதிமன்ற சேவையாளர் (பிஸ்கால்) விமான பயண கட்டுப்பாட்டு அறைக்கு சென்று குறித்த விமானத்தின் பயணத்தை இரத்து செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளார்' என மேலதிக சொலிசிடர் ஜெனரால் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்போது திறந்த மன்றில் வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க இவ்வழக்கில் இரண்டாம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பயண கட்டுப்பாட்டாளருக்கு எந்த தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கலாநிதி லசந்த ஹெட்டி ஆரச்சி நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு காரணமாக அந்த விமானம் ஊடாக மொஸ்கோ நோக்கி பயணிக்க தயாராகவிருந்த 191 பயணிகள் 32 விமான சேவையாளர்கள் இலங்கையில் இருந்து வெளியேற முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
'அவர்களை பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்க வேண்டிய நிலைமை எனது சேவை பெறுநரான நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மிகப்பெரும் நட்டத்தை எனது சேவை பெறுநர் எதிர்நோக்குகிறார்.
முறைப்பாட்டாளர் நிறுவனம் முன்வைத்த அடிப்படையற்ற விடயங்களை ஆராய்ந்து இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே அத்தடையை நீக்கி உத்தரவினை பிறப்பிக்குமாறு கோருகிறேன்' என ரஷ்ய விமான சேவை நிறுவனம் சார்பில் ஆஜரான கலாநிதி லசந்த ஹெட்டி ஆரச்சி மன்றில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த வணிக மேல் நீதிமன்றம் தற்போதும் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்கி உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணையை நடாத்துவதாக அறிவித்தது.
அதற்கு முன்னர் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இவ்வழக்கின் முறைப்பாட்டை முன்வைத்துள்ள அயர்லாந்து நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
மனுதாரரான அயர்லாந்து நிறுவனம் சார்பில் சட்டத்தரணி அனுர டி சில்வாவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி அவிந்ர ரொட்ரிகோ மன்றில் ஆஜரானார்.
No comments:
Post a Comment