நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் திங்கட்கிழமை பாடசாலைக்கு செல்ல முடியும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் திங்கட்கிழமை பாடசாலைக்கு செல்ல முடியும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாடு பூராகவும் நாளை திங்கட்கிழமை (06) பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள போதிலும், நாட்டின் அதிகளவான பாடசாலைகளுக்கான நீர் விநியோக வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றபோது தங்களுக்கு தேவையான நீரை எவ்வாறு பெற்றுக் கொள்வார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொது போக்கு வரத்து, பாடசாலை போக்கு வரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள், வேன்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், போக்கு வரத்த கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, அவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் நிவாரணத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கொழும்பில் அமைந்துள்ள 'குரு மெதுர'வில் சனிக்கிழமை (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், "தற்போது நாட்டு மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட உணவுப் பொருட்களுக்கான செலவு, எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான செலவு, போக்கு வரத்துக்கான செலவு ஆகியன அதிகரித்துள்ள சூழ்நிலையில், கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பாடசாலை நீர் கட்டணத்தையும் பாடசாலை மாணவர்களது பெற்றோரே செலுத்த வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரிக்கு முன்னர், பாடசாலைக்கு நீர் கட்டணங்கள் அறவிடப்படவில்லை. எனினும், தற்போது பாடசலைக்கான நீர் வழங்கல் கட்டணத்தை பாடசாலை சமூகமே செலத்த வேண்டியுள்ளது. இவை பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு மேலதிக செலவை ஏற்படுத்தியுள்ளதுடன், பொருளதார ரீதியாக அவர்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.

நாட்டின் அதிகளவான பாடசாலைகளில் குறிப்பாக மேல் மாகாணத்தின் பல பாடசாலைகளில் நீர் விநியோக வசதி நிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றபோது தங்களுக்கு தேவையான நீரை எவ்வாறு பெற்றுக் கொள்வார்கள். இதனை கல்வி அமைச்சு தேடிப்பார்த்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு எடுக்க வேண்டும்.

அத்துடன், மாணவர்களின் போக்குவரத்துக்கான செலவு மற்றும் பாடசாலை போக்கு வரத்து சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்வு எடுக்க வேண்டும், இல்லையெனில், தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் தயங்க மாட்டோம்" என்றார்.

No comments:

Post a Comment