இலங்கையில் திடீரென அதிகரித்த துப்பாக்கி கலாசாரம் : போதைப் பொருளுடன் தொடர்புடைய ஐவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

இலங்கையில் திடீரென அதிகரித்த துப்பாக்கி கலாசாரம் : போதைப் பொருளுடன் தொடர்புடைய ஐவர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாக அதிக அளவிலான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதன்படி, கடந்த 4 நாட்களில் மாத்திரம் ஐந்து துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெட்பானா தோட்டத்துக்கு முன்பாக இன்று (6) மாலை நடாத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15, அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த, போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸாரால் கூறப்படும் 24 வயதான வினோதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 5.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்றில் வந்துள்ள இருவர், இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முகத்துவாரம் பொலிசாரும், கொழும்பு வடக்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞர் போதைப் பொருள் வழக்கொன்றில் விளக்கமறியலில் இருந்த நிலையில் அண்மையிலேயே பிணையில் வந்திருந்ததாக பொலிசார் கூறினர்.

சிறியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் குறித்த இளைஞன் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், பாரிய அளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவினருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் எனவும் பொலிசார் சந்தேகிக்கும் நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன

தங்காலை துப்பாக்கிப் பிரயோகம்
தங்காலை பகுதியில் நேற்றையதினம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஹங்கம துப்பாக்கி பிரயோகம்
அஹங்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அளுத்கம துப்பாக்கி பிரயோகம்
அளுத்கம பகுதியில் கடந்த 3ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 43 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொரி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம்
பாணந்துறை பகுதியில் கடந்த 3ஆம் திகதி நடத்தப்பட்ட மற்றுமொரு துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் மீது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 30 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐவர் உயிரிழப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த துப்பாக்கிப் பிரயோகங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை இந்த 5 சம்பவங்கள் தொடர்பிலும் எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களுக்கும், போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் போலீஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment