காருக்குள் விளையாடிய மூன்று குழந்தைகள் மூச்சு திணறி பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

காருக்குள் விளையாடிய மூன்று குழந்தைகள் மூச்சு திணறி பலி

இந்திய நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கபட்டிருந்த காருக்குள் விளையாடச் சென்ற 3 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் நிதிஷ் (7), மகள் நிதிஷா (5) பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கபிஷன் (4) ஆகியோர் சனிக்கிழமை வீட்டின் எதிரே பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென காரின் கதவு பூட்டிக் கொண்டதால் திறக்க முடியாமல் 3 குழந்தைகளும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த காரில் தேடியபோது அங்கு 3 குழந்தைகளும் இருப்பதைப் பார்த்து காரின் கதவைத் திறந்தனர்.

3 குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்ததால் உடனடியாக பணகுடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 3 குழந்தைகளும் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் அறிந்து சபாநாயகர் அப்பாவு பணகுடி அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது பெற்றோர்கள் அவரிடம் கதறி அழுதனர்.

சம்பவத்தை நேரில் பார்த்து மீட்பு பணியில் ஈடுபட்ட ஆடு மேய்க்கும் தொழிலாளி ராமையா பேசுகையில், "சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஆடு மேய்க்கச் செல்லும் போது குழந்தைகள் காருக்குள் விளையாடியதை நான் பார்த்தேன். பின்னர் ஆடு மேய்த்து விட்டு மாலை 5 மணியளவில் வீடு திரும்பும் போது குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் தேடி வந்தனர்."

"உடனடியாக நான் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த காருக்குள் சென்று பார்த்தபோது காருக்குள் மூன்று குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனடியாக காரின் கதவை உடைத்து அவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.

காரில் இருந்து மீட்கும் போது இரண்டு குழந்தைகள் உயிரற்ற நிலையில்தான் இருந்தனர். ஒரு குழந்தை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. அந்தக் குழந்தையும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டது," என்றார்.

'பெற்றோர் கண்காணிக்க வேண்டும்'
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வள்ளியூர் ஏஎஸ்பி சமய்சிங் மீனா பேசுகையில், பணகுடி லெப்பை குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை என மொத்தம் 3 குழந்தைகள் சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் வீட்டுக்கு எதிரே பல நாட்களாகப் பயனற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் விளையாடி உள்ளனர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் அந்த காரில் ஏறி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அந்த காரில் இரண்டு கதவுகள் திறக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. ஒரு கதவு திறந்து மூடும் நிலையில் இருந்துள்ளது. நேற்று வழக்கம் போல் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது திறக்கும் நிலையில் இருந்த கதவும் மூடிக் கொண்டு திறக்க முடியவில்லை. குழந்தைகள் பல முறை கதவைத் திறக்க முயன்றுள்ளனர், ஆனால் கதவை திறக்க முடியவில்லை.

அந்த கார் நீண்ட நாட்களாக வெயிலில் நின்றதால் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் காருக்குள்ளே இருந்துள்ளது. கார் கதவு கண்ணாடிகளையும் திறக்க முடியாததால் காருக்குள் இருந்த அதிகமான வெப்பம் காரணமாக, குழந்தைகள் மூச்சு விட முடியாமல் மயங்கியுள்ளனர்.

காரில் இருந்த இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதில் ஒருவர் உடலில் வெப்பத்தால் ஏற்பட்ட காயம் இருந்தது.

காரில் இருந்து குழந்தைகளில் இருவரை உயிரிழந்த நிலையிலும் ஒருவரை உயிருக்குப் போராடிய நிலையிலும் பெற்றோர் மீட்டுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அந்தக் குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்த கார் ஏசியில் இருந்து விஷ வாயு வெளியாகி குழந்தைகள் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கார் ஏசியை சோதனை செய்ததில் அப்படி விஷ வாயு எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

"தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் விளையாடச் செல்லும் போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். வீட்டுக்கு அருகிலுள்ள பயனற்ற கட்டடம், கார், தண்ணீர் டேங்க், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் விளையாடுவதற்கு குழந்தைகளை அனுப்பக்கூடாது.

விளையாடச் செல்லும் குழந்தைகளை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பெற்றோர் கவனிக்க வேண்டும். விடுமுறை நேரங்களில் குழந்தைகள் மீது பெற்றோர் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்," என வள்ளியூர் ஏஎஸ்பி சமய்சிங் மீனா தெரிவித்தார்.

No comments:

Post a Comment