இன்று இறுதி செய்யப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைவு : நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு : இரட்டைக்குடியுரிமை நீக்கத்தில் மாற்றமில்லை என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

இன்று இறுதி செய்யப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைவு : நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு : இரட்டைக்குடியுரிமை நீக்கத்தில் மாற்றமில்லை என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச

(ஆர்.ராம்)

நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு செய்யப்படும் வரைவானது நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் ஏற்பாடு உள்வாங்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் விஜயதாச ஆகியோர் தலைமையில் முன்மொழியப்பட்ட 21ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் வரைவு தொடர்பான அரசியல் கட்சிகளின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது ‘பொது இணக்கப்பாடு’ எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்த கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விஜயதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் முன்மொழியப்பட்ட வரைவில் உள்வாங்கும் முகமாக திருத்தியமைக்கப்படவுள்ளன.

இந்தச் செயற்பாட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளேன். அதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் அமர்வின்போது இறுதி செய்யப்பட்ட 21ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கான வரைவு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவை அனுமதியைப் பெற்றதன் பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்த திருத்தச் சட்ட மூலத்தினை சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாத வகையிலேயே ஏற்பாடுகளை செய்வதற்கு முயற்சித்துள்ளோம்.

இருப்பினும், உயர் நீதிமன்றத்தினை ஏதேனும் தரப்புக்கள் நாடுகின்ற பட்சடத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக அடுத்த கட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

மேலும், தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகளைப் போக்குவதற்கான தற்காலிக தீர்வாகவே இந்த 21ஆவது திருத்தம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment