(எம்.எப்.எம்.பஸீர்)
பாரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில், அரச தரப்பு சாட்சியாளர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது.
சாட்சியாளர்கள் குறித்த விடயங்கள், பொலிஸ் திணைக்களத்துக்குள் இருந்து வெளியே கொடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இதனூடாக விசாரணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்றுடன் நிறைவடைந்த ஒரு வார காலத்தில் மாத்திரம் கொழும்பிலும், கொழும்புக்கு வெளியேயும் இத்தகைய 4 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அடையாளம் தெரியாதோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவங்களால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (4) அஹங்கம - திக்கும்புர வீதியில் பாங்சாலிய வித்தியாலயம் அருகே நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். திக்வெல்ல - தம்பகஸ் ஆர பகுதியைச் சேர்ந்த 26 வயதான கசுன் சாமர எனும் நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் திக்வல்ல, வலஸ்கல பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன் காரில் பயணித்துக் கொன்டிருந்த போது அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிலில் வந்து, 'சாமர என்பது நீரா' என விசாரித்த பின்னர் துப்பாக்கிச் சூடு நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையிலேயே திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர் கடந்த 2021 ஜூன் 13 ஆம் திகதி வெலிகம - பொல்அத்து மோதர பகுதியில் படகூடாக கடத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 218 கிலோ 800 கிராம் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவராவார்.
அவரை அரசாங்க தரப்பு சாட்சியாளராக பயன்படுத்த திட்டமிருந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலையிலேயே அவரின் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கே மீள் விற்பனை செய்தமை தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அது குறித்த விசாரணைகளில், தெற்கு கடற்பரப்பில் படகுகள் ஊடாக கொண்டுவரப்படும் போதைப் பொருளில் ஒரு தொகை, போதைப் பொருள் வர்த்தகர்களுக்கே மீல விற்பனைச் செய்யப்பட்டுள்ளமை குறித்து தெரியவந்திருந்தது.
இது குறித்து சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். அது குறித்த வழக்கின் அரச சாட்சியாளரே அளுத்கமவில் சுட்டுக் கடந்த 3 ஆம் திகதி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் புறக் கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழை வாயில் அருகே, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனை தெரியும் தூரத்தில், கடந்த மே 30 ஆம் திகதி முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றொரு முன்னாள் இராணுவ வீரர் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடானது, அளுத்கமவில் கடந்த 3 ஆம் திகதி கொல்லப்பட்ட நபரின் உறவினர் ஒருவரை (மச்சினன்) இலக்கு வைத்தது எனவும், வழக்கொன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் ஆள் அடையாளம் மாறியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த உறவினரும், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கே மீள் விற்பனைசெய்யப்பட்ட வழக்கின் அரச சாட்சியாளர் என கூறப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர்கள், புறக்கோட்டையிலிருந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக சென்று லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாக மருதானை நோக்கி சென்று தப்பிச் சென்றுள்ளமையும், அவர்கள் பயனித்த மோட்டார் சைக்கிலின் இலக்கம் போலியானது எனவும் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி.யின் திட்டமிட்ட குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவு வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.
இந்நிலையிலேயே தற்போது பிரிதொரு கோணத்தில் எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே பாரிய போதைப் பொருள் வழக்குகளின் சாட்சியாளர்கள் இலக்கு வைக்கப்படுவது குறித்து பொலிஸ் தலைமையகத்தின் விஷேட கவனம் திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது.
No comments:
Post a Comment