நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதென ஊடக நிறுவன தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வரவிருக்கும் மாதங்களில் நாட்டுக்கு உதவ, ஊடக நிறுவனங்களின் ஆதரவில்தான் தங்கியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (09) மாலை இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தார். இதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் நிலைமையின் உண்மையான நிலையை முன்வைக்க அரசாங்கத்துக்கு உதவுமாறு ஊடக உரிமையாளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தேவையான போது ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அதேவேளை பொறுப்பான அறிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இக்கலந்துரையாடலின் போது பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள் பணியாளர் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக அவர் விளக்கினார்.
நிலுவையில் உள்ள உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் அவர் விளக்கினார்.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 03 வேளை உணவு வழங்க முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக அதன் விளைவுகளை நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் விளக்கினார்.
No comments:
Post a Comment