நாட்டின் 16 மாவட்டங்களில் 83 சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர நேற்று (10) தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டம் அதிகளவிலான டெங்கு பரவும் மாவட்டமாகவும், 18 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுக்க, பொரலஸ்கமுவ, ஹன்வெல்ல, கஹதுடுவ, பத்தரமுல்லை, இரத்மலானை, எகொட உயன மற்றும் கொதடுவ ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக கருதப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமுள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 51.2 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 08 நாட்களில் மாத்திரம் 2,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றுமுன்தினம் (09) 349 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் பரவலைக் குறைப்பதற்காக எதிர்வரும்15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தாங்கள் வாழும் சூழலை நுளம்புகள் பெருக்கம் அதிகரிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், 24 மணி நேரமும் காய்ச்சல் இருந்தால் டெங்கு சந்தேகத்தின் பேரில் தகுதியான மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment