அனைத்து அரச நிறுவனங்களிலும் ஜனாதிபதியின் புகைப்படத்திற்குப் பதிலாக இந்தியப் பிரதமரின் புகைப்படத்தை மாட்டுங்கள் - ரோஹன பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, June 3, 2022

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஜனாதிபதியின் புகைப்படத்திற்குப் பதிலாக இந்தியப் பிரதமரின் புகைப்படத்தை மாட்டுங்கள் - ரோஹன பண்டார

(நா.தனுஜா)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும், அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சுக்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச ஸ்தாபனங்களிலும் மாட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதியின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டுமாறு யோசனை முன்வைக்கின்றேன். ஏனெனில் இப்போது இந்தியாவிடம் தஞ்சமடைவதைத் தவிர வேறெந்த வழிகளும் இல்லாது போயுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (2) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும், அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்தியாவினால் வழங்கப்படும் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசாங்கமா தற்போது இருக்கின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுந்துள்ளது.

அதுமாத்திரமன்றி அடுத்த போகத்திலிருந்து அரிசி இறக்குமதியைப் படிப்படியாகக் குறைக்கப் போவதாகவும், அதன் மூலம் எஞ்சுகின்ற பணத்தை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப் போவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். ஆனால் இறக்குமதியியை நிறுத்திய பின்னர் உள்நாட்டு விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு அவசியமான உரத்தை எங்கிருந்து பெற முடியும்?

நாட்டில் டொலருக்கான நெருக்கடி நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் உரத்தை இறக்குமதி செய்யுமாறு தனியார் துறையினரிடம் கூறுகின்றது. அவ்வாறெனில் தனியார் துறையினர் அதற்குத் தேவையான டொலரை எவ்வாறு பெற்றுக் கொள்வர்?

எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் நிலத்தில் விழும் ஒருதுளி மழை நீரையும் விரயமாக்கக் கூடாது எனக்கருதி அதனைச் சேமிக்கக் கூடியவாறு வாவி, குளங்கள் போன்றவற்றை நிர்மாணித்திருக்கின்றார்கள்.

ஆனால் நாட்டின் நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சிபீடமேறியவர்கள் நவீனமுறைகளை மாத்திரமன்றி பழமையான முறைகளையும் இல்லாமல் செய்திருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சுக்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச ஸ்தாபனங்களிலும் மாட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதியின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டுமாறு யோசனை முன்வைக்கின்றேன். ஏனெனில் இப்போது இந்தியாவிடம் தஞ்சமடைவதைத் தவிர வேறெந்த வழிகளும் இல்லாதுபோயுள்ளன.

உலக நாடுகளின் சிறந்த அபிப்பிராயத்தை வென்றவர் என்று கருதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானமும் இப்போது தோல்வியடைந்திருக்கின்றது. 

ரணில் விக்ரமசிங்க 'டீல்' மூலம் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட போதிலும், அந்த அரசாங்கத்தை செயற்திறனான முறையில் நிர்வகித்து முன்னோக்கிச் செல்ல முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment