(இராஜதுரை ஹஷான்)
இரட்டை குடியுரிமையுடையவர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபின் யோசனையை முழுமையாக நீக்கிக் கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என நீதியமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பிலான தமது யோசனைகளை முன்வைக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) வரை காலவகாசம் கோரியுள்ளனர்.
உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டம் இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தச் சட்ட மூல வரைபு தொடர்பிலான யோசனைகளை இறுதிப்படுத்தி முழுமையான திருத்த வரைபினை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், நீதியமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் தெரிவில் காணப்படும் சிக்கல் நிலைமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இதன்போது பல விடயங்களை முன்வைத்துள்ளனர்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் கட்டமைப்பு மற்றும் அதற்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.
திருத்த யோசனையில் காணப்படும் சந்தேகங்களுக்கான தெளிவுபடுத்தல் வாய் மொழி மூலமாக அமைவது சாத்தியமற்றதாகும், ஆகவே திருத்தத்தில் காணப்படும் சந்தேகங்கள் விரைவாக திருத்தம் செய்யப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினர்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை தடை செய்யும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனை இரத்து செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சாகர காரியவசம் உட்பட பொதுஜன பெரமுனவின் பின் வரிசை உறுப்பினர்கள் நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
பொதுஜன பெரமுனவின் பிறிதொரு தரப்பினர் அதாவது சிரேஷ்ட அரசியல்வாதிகள் இரட்டை குடியுரிமையுடையவரின் அரசியல் பிரவேசம் தடை செய்யப்பட வேண்டும் என்பதுடன், ஒரு சில விடயங்களில் கட்டாயம் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான யோசனைகளுக்கு முழுமையாளன ஒத்துழைப்பை வழங்குவோம். திருத்த வரைபில் உள்ள விடயங்களை மேலும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே திருத்தத்தை முன்வைக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை காலவகாசம் அவசியம் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் முழுமையான இணக்கப்பாட்டை தொடர்ந்து தான் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்ட மூல வரைபு தயார் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு திருத்தத்தை நாட்டு மக்கள் முழுமையாக எதிர்பார்த்துள்ளார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தினால் மக்கள் கோரிய பெரும்பாலான விடயங்கள் 21ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்படவில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அவதானம் செலுத்த பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். 21ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதியமைச்சர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment