இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 64 பேர் கைது : 3 சிறுவர்கள், 11 பெண்கள் உள்ளிட்ட 2 தொடக்கம் 55 வயதுடையவர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 64 பேர் கைது : 3 சிறுவர்கள், 11 பெண்கள் உள்ளிட்ட 2 தொடக்கம் 55 வயதுடையவர்கள்

கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 64 பேர் சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (15) கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது திருகோணமலை கடற்பரப்பில் வைத்து இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் திருகோணமலை கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட நிலையில், சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பலை அவதானித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக பயணிப்பதற்கு உதவியவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் உள்ளிட்ட 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட, 02 முதல் 55 வயதுக்குட்பட்ட 64 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேகநபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மற்றும் மிகவும் ஆபத்தான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆட்கடத்தல்காரர்கள் நீண்ட தூர பயணங்களுக்கு பொருத்தமற்ற மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதாகவும், இந்த படகுகளில் கடத்த முயற்சிப்பது உயிருக்கு மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment