(இராஜதுரை ஹஷான்)
நாடு தழுவிய ரீதியில் இன்றைய தனியார் பேரூந்துகள் 35 சதவீதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்கு வரத்து நடவடிக்கையில் ஈடுபடும். பேருந்து சேவை மட்டுப்பாட்டினால் பொதுப் பயணிகள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வலுசக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பேரூந்து சேவை மட்டுப்பாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேரூந்துகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு வலுசக்தி அமைச்சிடம் பலமுறை உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்தோம்.
அரச பேரூந்துகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கி நாடு தழுவிய ரீதியில் அரச பேரூந்து போக்கு வரத்து சேவையினை முன்னெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
தனியார் பேருந்துகள் ஒரு பயணத்தை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை பெற்றுக் கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை நாடு தழுவிய ரீதியில் தனியார் பேரூந்து போக்கு வரத்து சேவையினை இன்று முதல் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய மன்னார், வவுனியா, கம்பஹா, தென் மாகாணம், கேகாலை, கண்டி, பொலன்னறுவை, பதுளை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 10 சதவீதம் தொடக்கம் 15 சதவீதமளவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும். கொழும்பு மாவட்டத்தில் 25 சதவீதமளவில் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
பெரும்பாலான பேரூந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்கு வரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படும்.
பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுப் பயணிகள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வலுசக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும். எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் தனியார் பேரூந்து சேவையினை விரிபுப்படுத்திய வகையில் முன்னெடுக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment