(எம்.ஆர்.எம்.வசீம்)
செலுத்தப்படாமல் இருக்கும் வரி மற்றும் மறைக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை பெற்றுக் கொள்ள வேலைத்திட்டம் அமைக்க முடியுமாக இருந்தால் தற்போது வரி மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தை விட இரண்டு மடங்கு வருமானத்தை தேடிக்கொள்ளலாம் என தேசிய வருமான வரி ஆணையாளர்களின் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன தெரிவித்தார்.
வரி திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது தொடர்பாக தேசிய வருமான வரி ஆணையாளர்களின் சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டுக்கு விரைவாக பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் வரித் திருத்தத்தை மேற்கொண்டிருக்கும் என்ற நினைக்கின்றேன். நாட்டில் அதிகமானவர்கள் வரி செலுத்தாமல் இருக்கின்றனர்.
அதேபோன்று மறைக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை பெற்றுக் கொள்ள வேலைத்திட்டம் அமைக்க முடியுமாக இருந்தால் தற்போது வரி மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தை விட இரண்டு மடங்கு வருமானத்தை தேடிக் கொள்ளலாம். இந்த வேலைத்திட்டம் நீண்ட கால நடவடிக்கையாக அமைய வேண்டும்.
அத்துடன் வருமான வரி மூலம் வருமானம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பது போலவே நாட்டில் இடம்பெறும் கறுப்பு பொருளாதாரத்தில் இருந்தும் நாட்டை மீட்டிக் கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல்வாதிகள். திறமையில்லாத அதிகாரிகள் உட்பட வேறு அதிகாரிகள் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குழுவினராலே இந்த கறுப்பு பொருளாதாரம் இயக்கப்பட்டு வருகின்றது. இதனை வீழ்த்துவதற்கு மேல் இருந்து கீழ் வரை நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, 2019 இல் பாரியளவில் வரி நீக்கப்பட்டமையே காரணமாகும்.
2019 இல் மொத்த வருடாந்த வருமானம் 1,225 பில்லியன் ரூபாவாகும். என்றாலும் 2019 இல் இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததுடன் வரி திருத்தம் செய்து பாரியளவில் வரி குறைப்பு செய்தது.
இதனால் அரசாங்கத்துக்கு 1,200 பில்லியன் ரூபா வரை வருமானம் இல்லாமல் போனது. அந்த பணத்தை தேடிக் கொள்ள 1,700 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டது.
அதனால் தற்போதைய பண வீக்கத்துக்கு காரணம் பணம் அச்சிட்டு விடுவித்ததாகும். அரச ஊழியர்களின் சம்பளத்துக்கு மாத்திரம் 80 பில்லியன் ரூபா தேவை என்றார்.
No comments:
Post a Comment