மருத்துவ நெருக்கடியை தவிர்க்க முதற்கட்டமாக இரண்டு மில்லியன் டொலர் : பிரதமருடனான சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

மருத்துவ நெருக்கடியை தவிர்க்க முதற்கட்டமாக இரண்டு மில்லியன் டொலர் : பிரதமருடனான சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தெரிவிப்பு

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப் பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி அலாகா சிங்குக்குமிடையில் பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்போது இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பெற்றுக் கொடுக்கும் நிவாரண வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக இரண்டு மில்லியன் டொலர் பெறுமதியான சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.

அதற்கிணங்க தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதைய நெருக்கடிகளை எதிர்வரும் ஜுலை, ஓகஸ்ட் மாதமளவில் நிவர்த்தி செய்ய முடியுமென உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரின் போசாக்கை அதிகரிக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்காக உலக சுகாதார அமைப்பு பெற்றுக்கொடுக்கும் ஒத்துழைப்புக்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இலங்கையை சுகாதார காப்புறுதிக்கு உட்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதற்காக உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு அவசியமென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் சுகாதாரத் துறையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் தலைவர் ருவான் விஜயவர்தன சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் தொடர்பான இணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவை பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் அன்வர் ஹந்தானி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment