மேயரின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட மாநகர ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை - கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 30, 2022

மேயரின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட மாநகர ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை - கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாநகர ஆணையாளரின் நடவடிக்கைகளால் மாநகர மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க முடியாமல் இருந்து வருகின்றது. அதனால் புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்க மேல் மாகாண ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.எச். மன்ஸில் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சி கொண்டுவந்த அதிருப்தி பிரேரணை இன்று கொழும்பு மாநகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு மாநகர சபையில் 6 மேயர்கள் 7 மாநகர ஆணையாளர்களுக்கு கீழ் சேவை செய்திருக்கின்றோம். ஆனால் தற்போதுள்ள மாநகர ஆணையாளரின் நடவடிக்கை மிகவும் மோசமாகவே இருந்து வருகின்றது.

மாநகர சபை மேயரின் தீர்மானத்தை மதிக்காமல் செயற்பட்டு வருகின்றார். அவரின் நடவடிக்கையால் மாநகர சபையால் மக்களுக்கு முன்னெடுக்க இருந்த பல வேலைத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேயரின் தீர்மானத்துக்கு எதிராக ஆணையாளருக்கு செயற்பட முடியாது.

அத்துடன் தற்போதுள்ள மாநகர ஆணையாளர் மாநகர மக்களின் கோரிக்கைகளை பதிப்பதில்லை. மேயர் மற்றும் மாநகர உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றார்.

மாநகர சபையில் எடுக்கப்படும் சட்ட ரீதியான தீர்மானங்களை இடைநிறுத்தவோ அதனை தடுப்பதற்கோ ஆணையானருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அவ்வாறு இருந்தும் மேல் மாகாண ஆளுனர் ஊடாக மாநகர சபையினால் தீர்மானிக்கப்படும் வேலைத்திட்டங்களை இடை நிறுத்தி வருகின்றார். இதனால் மாநகர சபை தொடர்பாகவும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாகவும் எமது மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களே பரவுகின்றன.

குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக மாநகர சபையால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நல வேலைத்திட்டங்கள் ஆணையாளரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

எனவே தற்போதுள்ள மாநகர ஆணையாளர் இந்த பதவியில் இருக்கும் வரை மக்கள் சேவைகளை எம்மால் முன்னெடுக்க முடியாத நிலையே இருக்கின்றது. அதனால் ஆணையாளரை இடமாற்றி, புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்க மேல் மாகாண ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment