(எம்.மனோசித்ரா)
அமைச்சுப் பதவிகளை வகிப்பதற்கு ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரத்தினை முற்றாக நீக்கி, எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
நிறைவேற்றதிகார முறைமையை இல்லாதொழிக்கும் முயற்சியின் முதற்படியாக இந்த திருத்தம் அமைந்துள்ளமையால் அதிலுள்ள சாதகமான விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்றும் சட்டத்தரணி அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்காது என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திருத்தத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் ஐக்கிய மக்கள் அதனை ஆதரிக்கும்.
கடந்த வெள்ளியன்று அரசாங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் நாம் இதனை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம்.
நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் ஜனாதிபதி விரும்பும் எத்தனை அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியும் என்ற உள்ளடக்கம் காணப்படுகிறது. ஆனால் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்க முடியாது என்ற உள்ளடக்கமே காணப்படுகிறது.
அத்தோடு பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய ஆயுட்காலம் நிறைவடைய முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனில் அது தொடர்பான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்து பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற உள்ளடக்கத்தினை நாம் எமது திருத்தத்தில் உள்ளடக்கியுள்ளோம்.
இதனை நீதி அமைச்சர் முன்வைத்துள்ள திருத்தத்திலும் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளோம்.
19 ஆவது திருத்தத்தினை மீள நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கும் தான் இணங்குவதாக அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை அவ்வாறே இருக்க 19 ஐ மீள நடைமுறைப்படுத்துவதாகவே உள்ளது. இது 19 பிளஸ் அல்ல. அதனை விட குறைவானதாகும்.
எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சிறிய ஆனால் முக்கிய திருத்தங்கள் மேற்கொளளப்படுமாயின் ஐக்கிய மக்கள் சக்தி 21 ஆவது திருத்தத்தினை ஆதரிக்கும்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் முதற்படியாக இது அமைந்துள்ளது. எனவே இதனை நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
நாட்டில் தற்போது பொருளாதார மறுசீரமைப்புடன் அரசியல் மறுசீரமைப்பும் அத்தியாவசியமாகிறது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் மாகாண சபைகளின் செயற்பாடு முடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளை தொடர்ந்தும் நிர்வகித்துச் செல்வற்காக ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அதன்படி மாகாண சபைகளை நிர்வகித்துச் செல்லும் அதிகாரத்தை ஆளுனர்கள் பெறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் போது, பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையுடன் பெயரளவிலான ஜனாதிபதி இது குறித்த தீர்மானங்களை எடுக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment