(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் உத்தேச 21 ஆம் திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விரைவில் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதன் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அத்தோடு நாடு ஸ்திரமானதொரு நிலைமையை அடைந்தவுடன் பொதுத் தேர்தலுக்குச் செல்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்த கட்சி சாரா அரசாங்கத்தை அமைப்பதற்கு சகலரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி சாரா அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரால் பிரதமருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியின் பதவி விலகல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதோடு, இவ்விடயம் தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்துடன் இணக்கப்பாட்டை எட்ட முடியும்.
அத்தோடு 21 ஆவது அரசியமைப்பு திருத்தத்தினை விரைவில் நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிறைவேற்றுத்துறையை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளேன்.
'கோட்ட கோ கம' மீதான தாக்குதல்
கோட்ட கோ கம ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையை நான் கண்டிக்கின்றேன். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பொலிஸாரால் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
மேலும் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் இரு வாரங்களுக்கொருமுறை சபாநாயகருக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு என்னால் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாராளுமன்றத்திற்குள் குறித்த விசாரணைகள் தொடர்பில் மதிப்பீடு செய்ய முடியும்.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம்
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, விரைவில் அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் சுயாதீன பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பு தேவைப்படின் அதனையும் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து துறைகளுக்குமான தேசிய கொள்கையை ஸ்தாபித்தல்
என்னால் தற்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ள தேசிய சபையின் ஊடாக அனைவரதும் இணக்கப்பாட்டுடன் விரைவில் பொது வேலைத்திட்டங்களை நாட்டில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊழல், மோசடி தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
நாட்டில் சட்டத்தின் சுயாதீனத் தன்மையை நடைமுறைப்படுத்துவது அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. அதற்கமைய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சட்டமா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எவ்விதத்திலும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு இடமளிக்கப்படக் கூடாது. நாட்டில் இடம்பெறும் எந்தவொரு ஊழல், மோசடிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் உயர் நீதிமன்றத்தினாலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவொன்றினை அனுப்பி உயர் நீதிமன்றத்தில் மேலதிக விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பாராளுன்றத் தேர்தல்
நாடு ஸ்திரமடைந்தவுடன் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதில் ஜனநாயகத்திற்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னின்ற மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது.
எவ்வாறிருப்பினும் அதற்கு முன்னர் நாம் எதிர்வரும் சில மாதங்களுக்கு கடும் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு நாட்டை ஸ்திரதன்மைக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக கட்சி சாரா அரசாங்கமொன்றை அமைப்பதற்கு உங்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment