தமிழ் ஈழத்திற்கு பாதை அமைக்கும் நாட்டுக்கு எதிரானவர்களும் காலி முகத்திடலில் இருக்கின்றனர். அத்தகையோரை அங்கிருந்து அகற்றுமாறு உண்மையான ஆர்ப்பாட்டக் காரர்களிடம் கோருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொருளாதார தீர்வுதான் தேவை. தலைகளை மாற்றுவதால் கேஸ் கிடைக்காது. எரிபொருள் கிடைக்காது. அவ்வாறாயின் தற்போதைய நிலையில் அரசியல் மாற்றமின்றி பொருளாதார மாற்றமே தேவை.
மக்களை குழப்பி அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. எமது நாட்டுக்கு உதவ வேண்டாம் என சிலர் சர்வதேச நாணய நிதிக்கு கடிதம் எழுதுகின்றனர்.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவை நிரூபிக்கப்படுவதில்லை. தவறு செய்திருந்தால் எமக்கு எதிராக வழக்கு தொடருங்கள். நாட்டை குழப்ப முயல்வது தேசத் துரோகமாகும்.
காலி முகத்திடலுக்கு பல்வேறு தரப்பினர் வருகின்றனர். அரசை விமர்சிக்க உரிமையுள்ளது. ஆனால் இதற்குள் வேறு நபர் நுழைந்து அதனை வேறுபக்கம் திருப்ப முயல்கின்றனர்.
பௌத்த மதத்திற்கும் தேசிய கொடிக்கும் அவமதிப்பு செய்பவர்கள் அங்கு இருந்தால், தமிழ் ஈழத்திற்கு வழிஅமைப்பதாக இருந்தால், வேறு மதத்தை மேம்படுத்துவதாக இருந்தால், புத்தர் சிலை உடைக்க ஒத்துழைப்பதாக இருந்தால் அத்தகையோரை ஆர்ப்பாட்ட பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என உண்மையாக ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களிடம் கோருகிறோம்.
முழு சிங்கள சமூகத்தையும் அவமதித்த, படையினரை ஜெனீவாவில் காட்டிக் கொடுத்த நபரையும் காலி முகத்திடலில் கண்டேன், என கூறினார்.
லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment