(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை புதன்கிழமை (4) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு நேற்று கூடி ஆராய்ந்தது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் பங்குபற்றலுடனும் இக்கூட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சியான மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் இதில் கலந்து கொண்டது.
இந்த கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்திற்கும் சமர்பிப்பதற்கும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்கான தீர்வை வழங்க இந்த அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாது.
எனவேதான் வீதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இதன் மூலம் சுயாதீனமாக செயற்படுவதாகக் கூறிக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பவர்கள் தொடர்பிலும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.
அதற்கமைய 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment