சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த பிரேரணைக்கு நான் ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தேன். அது நம்பிக்கையில்லா பிரேரணைக்காகும் ஆனால் அந்த பிரேரணை 6ஆம் திகதி ஜனாதிபதிக்கு அதிருப்தி பிரேரணை என மாற்றப்பட்டது. என்றாலும் நேற்றையதினம் (நேற்று முன்தினம்) சபையில் முக்கியமான விவாதம் இடம்பெற இருப்பதால், இந்த பிரேரணையை வேறு தினத்துக்கு ஒத்திவைப்போம் என்றே நான் சுமந்திரன் எம்.பிக்கு தெரிவித்திருந்தேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்களின் நலனுக்காக அரசிற்கு ஆதரிக்கத் தயார் எனவும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் பிரதமரின் நோக்கத்தை செயலில் காட்ட வேண்டும் என்றும் கோரினார். அத்துடன் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு பிரதமர் எதிராக வாக்களித்தமை தொடர்பாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து பதிலளிக்கையில், நான் வேறு எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த பிரேரணைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார். அது பிரச்சினை இல்லை. என்றாலும் இந்த விடயத்தில் நாங்கள் ஜனநாயக முறைப்படி செயற்படுவோம் என தெரிவித்திருந்தேன்.
அதேபோன்று கலவரத்தில் வீடுகள் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிகமாக வீடுகளை வழங்குவதற்கே தீர்மானித்தோம். 88/89 கலவரத்தின்போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தற்காலிகமாக வீடுகளை வழங்கி இருந்தோம். பின்னர் அவர்களின் வீடுகளுக்கு அவர்கள் சென்றார்கள்.
என்றாலும் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்ல விரும்பினாலும் அவர்களின் மனைவிமார் அச்சப்படுகின்றனர்.
அடுத்த தேர்தலில் போட்டியிட இருப்பவர்களும் வீடுகளில் இருப்பவர்கள் போட்டியிட வேண்டாம் என தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் இந்த பிரச்சினை இருக்கி்ன்றது.
அப்படியானால் அடுத்த தேர்தலில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு யாரை தெரிவு செய்வது. துப்பாக்கி இருப்பவர்களையும் கூட்டணி இருப்பவர்களையுமே தெரிவு செய்து கொள்ள வேண்டி வரும். அப்படியானால் மீண்டும் பழைய நிலைமையேஏற்படும். அதனால் நல்லவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும்.
அடுத்ததாக இந்த தாக்குதலின் பின்னணியில் அனைத்து கட்சிகளின் அடிமட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர். மொட்டு கட்சி ஆதரவாளர்களும் இருக்கின்றனர். அதனால் இவர்கள் தொடர்பில் விசாரணை செய்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களை எமது கட்சிகளில் இருந்து நீக்கிக் கொள்வோம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் இவ்வாறான வன்முறை சம்பவங்களுக்கு செல்வதில்லை. வீடுகளுக்கு தீ வைப்பது தொடர்பில் நினைத்துப் பார்க்கவும் மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் 24 மணி நேரமும் என்னை எவ்வாறு மட்டம் தட்டுவது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோன்று எனது நண்பர் அனுரகுமார இவ்வாறான சம்பவங்களை அனுமதிப்பதில்லை. அவரின் கட்சி ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அது தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எதிர்க்கட்சியின் சிறந்த மூச்சு வேலைத்திட்டம் இருக்கின்றது. அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது, தற்போது எமக்கு 14 வகையான மருந்து இல்லை. எதிர்க்கட்சியின் மூச்சு வேலைத்திட்டத்தின் மூலம் முடியுமானால் ஏதாவது ஒரு மருந்து வகையை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக எனது அமைச்சினாலும் சுகாதார துறையினாலும் அதிகாரிகளை உங்களுக்கு தருகின்றேன். இந்த விடயத்தில் நாங்கள் இரு தரப்பினரும் இணைந்து வேலை செய்வோம் என்றார்.
No comments:
Post a Comment