சமையல் கலை என்பது பெண்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது அல்ல. ஆண்களும் அந்தக் கலையில் அசத்த முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஒருவராக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் விளங்குகிறார்.
அவர் நாட்டின் தலைவர் என்ற தனது அதி உயர் கடமைப் பொறுப்புகளுக்கு மத்தியில் அவ்வப்போது தனது சமையில் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சமையல் செய்து அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் ஸ்கொட் மொரிஸனின் அபிமானம் பெற்ற உணவு வகைகளில் இலங்கை உணவு வகைகள் முக்கியத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அன்புக்குரிய மனைவி ஜென்னி மற்றும் மகள்மாரான அபி, லில்லி ஆகியோருக்கு சுவைமிக்க இறைச்சிக் கறியை சமைத்துப் பரிமாறும் முயற்சியில் களம் இறங்கியிருந்தார்.
அவர் தான் மேற்படி சமையலைச் செய்வதை வெளிப்படுத்தும் புகைப்படங்களைத் தனது பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் நேற்று திங்கட்கிழமை பதிவேற்றம் செய்திருந்தார்.
அவர் சோறு, இலங்கைக் கத்தரிக்காய் புளிக் கறி, வெண்டிக்காய் கறி என்பவற்றுடன் கோழி இறைச்சி குருமாக் கறியை சமைத்து பரிமாறினார்.
அவர் மேற்படி உணவுகளை உள்ளடக்கிய புகைப்படங்களை "பலமான கறி. பலமான பொருளாதாரம். பலமான எதிர்காலம்'' என்ற தலைப்பில் பேஸ்புக் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
ஆனால் மேற்படி புகைப்படங்களை உன்னிப்பாக பார்வையிட்ட விமர்சகர்கள், மேற்படி இறைச்சிக் குருமாக் கறி அபாயகரமான முறையில் சரியான முறையில் சமைக்கப்படாது காணப்படுவதாக தெரிவித்து இந்த உணவுகளை உண்பதற்கு பலமான வயிறு தேவையாகவுள்ளதாக விமர்சித்துள்ளனர்.
இந்த உணவை உண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாது இருந்தால் அது அதிர்ஷ்டமாகும் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட் மொரிஸன் இவ்வாறு மோசமாக சமைப்பதற்கு பதிலாக பிரதமர் அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகளான நடேசலிங்கம் முருகப்பன் குடும்பத்தினரின் புகலிடக் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என ஒருவர் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்கொட் மொரிஸன் செவ்வாய்க்கிழமை பேஸ்புக் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்த செய்தியில், அந்த இறைச்சி சரியான முறையில் சமைக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment