(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
பிரதி சபா நாயகர் தெரிவு விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்னை தொடர்புப்படுத்தி சபையில் ஆற்றிய உரை முற்றிலும் தவறானது. ராஜபக்ஷக்களுடன் நான் ஒருபோதும் ஒன்றிணையவில்லை. என்னை தோற்கடிப்பதற்காக ராஜபக்ஷக்கள் பிரபாகரனுடன் ஒன்றிணைந்தார்கள் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதி சபாநாயகர் தெரிவு விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி சாணக்கியன் சபையில் தவறான விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷக்களுடன் நான் ஒருபோதும் ஒன்றினையவில்லை. என்னை தோற்கடிப்பதற்காக ராஜபக்ஷர்கள் பிரபாகரனுடன் ஒன்றினைந்தார்கள்.
சாணக்கியன் இராசமாணிக்கம் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு நான் ஒருபோதும் சரணம் கச்சாமி துதி பாடவில்லை. துதிபாடிய பழக்கம் அவருக்கு உண்டு.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தற்போது பல விடயங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகிறார்கள். பிரதிசபாநாயகர் தெரிவு தொடர்பில் கடந்த வாரம் உறுதியான தீர்வு எடுக்கப்பட்டிருந்தது.
பதவி விலகிய ரஞ்சித் சியம்பலாபிடியவை மீண்டும் எதிர்க்கட்சியின் பரிந்துரையாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது. எதிர்தரப்பினரது பரிந்துரைக்கு ஆதரவு வழங்குவேன் என குறிப்பிட்டேன்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆளும் தரப்பினர் எவரையும் பரிந்துரைக்கவில்லை. ஆகவே அவர்கள் சுயாதீன தரப்பினரது பரிந்துரைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக கடந்த புதன்கிழமை அறிந்துகொண்டேன்.
சபைக்கு வந்தவுடன் நான் தெரிந்துகொண்ட விடயம் உண்மை என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் நிமல் சிறிபாடி டி சில்வா என்னிடம் தெரிவித்தார்.
எதிர்தரப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்டேன். இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் சபையில் இருந்தவாறே உரையாடினேன்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்க்கட்சி சார்பில் பிரதி சபாநாயகர் பெயரை பரிந்துரை செய்தார்கள். இவ்விடயம் தொடர்பில் சுமந்திரன், அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் உரையாடினேன்.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். தற்போதைய பிரச்சினைக்கு ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
பிரதி சபாநாயகர் தெரிவின் போது சுயாதீன குழுக்களில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிடியவிற்கு ஆதரவு வழங்குமாறு நான் உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டதாக சாணக்கியன் சபையில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது.
இவரது கருத்தை தொடர்ந்து எனது வீட்டையும் முற்றுகையிட வேண்டும் என சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் பிரச்சினைகளை தீவிரப்படுத்தி விடக் கூடாது.பாராளுமன்றில் ஆற்றும் உரை வெளியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment