அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தினால் சுற்றுலாத்துறை, கைத்தொழில் மீண்டும் பாதிப்பு : ஒரு சில கலாநிதிகள், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வெறுப்பினை கற்பிக்கிறார்கள் - பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தினால் சுற்றுலாத்துறை, கைத்தொழில் மீண்டும் பாதிப்பு : ஒரு சில கலாநிதிகள், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வெறுப்பினை கற்பிக்கிறார்கள் - பிரசன்ன ரணதுங்க

(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வெறுப்பினை கற்பிக்கிறார்கள். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தினால் சுற்றுலாத்துறை, கைத்தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தினுடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மீதான விவாதத்தின் போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் எதையும் மறைக்காமல் பாராளுமன்றிற்கு அறிவித்தார். பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். அனைத்து தவறுகளின் விளைவும் இன்று அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு சில கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வெறுப்பினை போதிக்கிறார்கள். பெற்றோர் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு தங்களின் பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். மாணவர்கள் ஒரு சிலரது தவறான வழிநடத்தல்களை தொடர்ந்து வீதியில் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் பொறுமையுடன் செயற்பட்டார்கள்.

ரம்புக்கனை சம்பவத்தை போன்று அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் திட்டமிட்ட வகையில் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினையினை தேசிய பிரச்சினையாக கருதி தீர்வு காண சர்வ கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி, பிரதமர் சகல அரசியல் கட்சிகளுக்கும் உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.

நெருக்கடியான சூழ்நிலையில் ஒத்துழைப்பு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சவால்களை ஒருபோதும் ஏற்க போவதில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சுற்றுலாத்துறை சேவைக்கைத்தொழில் ஊடாக டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

அரசாங்கத்திற்கு எதிரான திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தினால் சுற்றுலாத்துறை சேவைக்கைத்தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை மாணவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment