மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களது பொறுப்பாகும் : ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது - பேராயர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 4, 2022

மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களது பொறுப்பாகும் : ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது - பேராயர்

(எம்.மனோசித்ரா)

மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களது பொறுப்பாகும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது. இதுபோன்ற செயற்பாடுகளை இப்போதிலிருந்தாவது நிறுத்தி, புதிய ஆரம்பமொன்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சகல அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்வதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திக்கான் சென்றிருந்த பேராயர் புதன்கிழமை (4) நாடு திரும்பினார். இதன் போது கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று பரிசுத்த பாப்பரசர் உறுதியாக வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக இது தொடர்பில் அரச தலைவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானதாகும். எனவே அரச தலைவர்கள் நாட்டைப் பற்றி சந்தித்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

மகா நாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. எனவே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நாட்டு தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடகங்களை அரங்கேற்றுவது பிரயோசனமற்றது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். ஜனாதிபதிக்கும், பிரதருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.

சட்டமானது அவர்களுக்கு மேலானதாக இருக்க வேண்டும். எனவே இவ்வாறான நடைமுறைகளை இத்துடன் நிறுத்தி புதிய ஆரம்பமொன்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சகல அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment