அரசியல், பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்காமல் நாட்டுக்கு டொலர் கிடைக்கும் என்று கனவு காண்பது பயனற்றது : தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் நகைப்பிற்குரியது - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

அரசியல், பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்காமல் நாட்டுக்கு டொலர் கிடைக்கும் என்று கனவு காண்பது பயனற்றது : தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் நகைப்பிற்குரியது - லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமிருந்து நீண்ட கால உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை இரண்டையும் மேற்கொள்ளாமல் நாட்டுக்கு டொலர் கிடைக்கும் என்று கனவு காண்பது பயனற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு இன்று எதிர்நோக்கும் பொருளாதாரப் பேரழிவு தொடர்பில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே எதிர்வு கூறினோம். எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் அரசாங்கம் அவற்றை சிறிதும் கண்டு கொள்ளவில்லை. ரூபாவின் பெறுமதி பூஜ்ஜியமாகக் குறையும் வரை காத்திருந்தனர்.

இவற்றுக்கு மத்தியிலும் நிதி அமைச்சர் பாராளுமன்ற அமர்வுகளில் கூட கலந்து கொள்ளவில்லை. இவ்வாறான நிலையில் நாட்டுக்கு டொலர் கிடைக்கப் பெறும் என்று அரசாங்கம் கனவு காண்கிறது.

உலக வங்கி 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கூறியது. ஆனால் அவ்வாறு கூறி 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு அவ்வாறான உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இன்று இந்நாட்டின் நிலைமை என்ன? நெருக்கடியின் கடைசி 3 அல்லது 4 மாதங்களில் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன.

இப்போது ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளை பார்த்தால், நம் நாட்டின் தலைவர்கள் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நிறுவனங்களிலும் உதவி கேட்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இன்றுவரை சிறிதளவான உதவிகளே கிடைத்துள்ளன. ஆனால் நாட்டை கட்டியெழுப்பத் தேவையான உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. காரணம் என்ன? 

உலக வங்கி அறிக்கை, ஐ.நா. அறிக்கை, சர்வதேச நாணய நிதிய அறிக்கையை அவதானிக்க வேண்டும். காரணம் இலங்கைக்கு உதவுவதற்கு அவற்றால் இரு விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் முதலாவது பொருளாதாரச் சீர்திருத்தங்களாகும். வருமானத்தை விட செலவுகள் மூன்று மடங்கு அதிகமாகும். இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய வேண்டும். இரண்டாவதாக அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

இவை இரண்டையும் முன்னெடுக்கவில்லை எனில் எந்தவொரு கடனுதவியும் கிடைக்கப் பெறாது. அதற்குத் தேவையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் சர்வதேசத்துக்கு வழங்கப்பட வேண்டும். குறித்த சீர்திருத்தங்கள் மக்களால் கோரப்பட்டவையாக இருக்க வேண்டும்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் மட்டுமே உதவி செய்கிறது. எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் தொடர்பிலும் திட்டமொன்றை சமர்ப்பித்து, அந்த திட்டத்தினை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னரே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உதவிகள் கிடைக்கப் பெறும். இந்த விடயங்கள் ஊடகங்களில் வெளிவருவதில்லை.

இந்த முன்மொழிவுகள் பற்றி நாங்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளோம். எனினும் அதற்கான நடவடிக்கைகள் இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிடும் என நம்புகின்றோம்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நம்பிக்கையைக்கூட பெற முடியாத அரசாங்கத்தினால் எவ்வாறு சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற முடியும்? 

தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் ஒரு புதிய அரசாங்கம் எனக் கூறினாலும் அது நகைப்பிற்குரியதாகவே உள்ளது. காரணம் ஏற்கனவே பதவி விலகியவர்களே மீண்டும் அமைச்சராகளாகியுள்ளனர்.

இது சர்வ கட்சி அரசாங்கம் அல்ல. எதிர்க்கட்சிகளின் அனுமதியின்றியே சில எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் இருவர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். பொருளாதாரத்தை அழித்த அரசால் அதை மீள கட்டியெழுப்ப முடியுமா? இதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் பொதுத் தேர்தல் மட்டுமே தற்போதைய நிலைமைக்கு ஒரே தீர்வாகும். ஒரு அரசாங்கம் பொதுத் தேர்தலின் மூலம் அதிகாரத்திற்கு வரும் போது, அந்த அரசாங்கம் சட்டபூர்வமான தன்மையைப் பெறுகிறது.

நாட்டை அழித்தவர்களால் இப்போது வெளிநாடுகளின் உதவித் திட்டங்களுக்குச் செல்ல முடியாது என்றார்.

No comments:

Post a Comment