அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய 5 யோசனைகளை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தி பிரதமருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய 5 யோசனைகளை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தி பிரதமருக்கு கடிதம்

(நா.தனுஜா)

ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளைத் தன்னகத்தே வைத்திருப்பதற்கு அனுமதி வழங்காதிருத்தல், தேசிய முன்னுரிமை ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படுவதைக் கட்டாயமாக்கல் உள்ளிட்ட 5 யோசனைகளை அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்குவது குறித்துப் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி பிரதமருக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கின்றது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளை உள்ளடக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களின் அபிப்பிராயம் என்னவென்பதைக் கருத்திற் கொண்டு அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலமொன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் தனி நபர் பிரேரணையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அது 'அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம்' என்ற பெயரில் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்தத் திருத்தத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்த்ததை மீண்டும் நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டுமே பிரதான யோசனைகளாக முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்திருத்தத்தின் மூலம் நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படும்.

உங்களது தலைமையில் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் எம்மால் அறியத்தரப்பட்டவாறு, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களை நீக்கிவிட்டு 19 ஆவது திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவருவதற்கு எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான விடயதானங்கள், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 21 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியிருக்காத நிலையில் அதனுடன் தொடர்புடைய சில விடயங்களை 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்குவது குறித்த யோசனைகளை முன்வைத்திருக்கின்றோம்.

அதன்படி ஜனாதிபதி தனக்குக் கீழ் அமைச்சுப் பதவிகளை வைத்திருக்க முடியாது என்று 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்டவாறான விடயம், அதேபோன்று மீண்டும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றோம்.

அடுத்ததாக மத்திய வங்கி ஆளுநர் தவிர்ந்த நிதிச் சபையின் ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அரசியலமைப்புச் சபையினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்தல் மற்றும் அவற்றில் எதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் ஆகியவற்றுக்காக தேசிய முன்னுரிமை ஆணைக்குழுவொன்றை சுயாதீன ஆணைக்குழுவாக ஸ்தாபிப்பதுடன், அதற்கான உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட அரச பதவிகளை வகிக்கும் அனைவரும் அவர்களது சொத்து விபரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்குவதுடன் அதனை மீறுபவர்கள் அல்லது பொய்யான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடைமையாக்குவதை முன்னிறுத்தி, இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக் கூடிய சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக அவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற 5 யோசனைகள் அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment