(எம்.மனோசித்ரா)
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கமைய நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்தற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் கட்சி மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன அவதானம் செலுத்தியுள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் தற்போதைய ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனையானது தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண முக்கிய தேவையாக கருதப்படுகிறது.
அதற்கமைய மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியன தேசிய வேலைத்திட்டமொன்றுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளன என்றார்.
No comments:
Post a Comment