(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதை தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததை தொடர்ந்து சுதந்திர கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அறிவித்தார்.
பிரதி சபாநாயகரின் பதவி விலகல் தீர்மானத்தை ஜனாதிபதி அப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ளாததை தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிடிய நிபந்தகைளின் அடிப்படையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை பிரதி சபாநாயகராக பதவி வகிக்க தீர்மானித்துள்ளதாக சபைக்கு அறிவித்தார்.
ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை பிரதி சபாநாயகர் பதவி வகிப்பதாக சுதந்திர கட்சியின் உறுப்பினரது தீர்மானத்தை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பிரதி சபாநாயகர் தெரிவிற்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டால் வாக்கெடுப்பின் ஊடாகவே பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதி சபாநாயகராக பதவி வகித்த திலங்க சுமதிபால பதவி விலகியதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆனந்த குமார சுவாமி, சுதர்ஷனி பிரனாந்து புள்ளே ஆகியோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
ஆனந்த குமாரசுவாமி 80 ற்கும் அதிகமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து அவர் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment