குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் : 33 இலட்சம் குடும்பங்களுக்கு 03 மாதங்களுக்கு விசேட கொடுப்பனவு : மூத்த பிரஜைகள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக வழங்க அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 3, 2022

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் : 33 இலட்சம் குடும்பங்களுக்கு 03 மாதங்களுக்கு விசேட கொடுப்பனவு : மூத்த பிரஜைகள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்

(எம்.மனோசித்ரா)

குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்துக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலக வங்கியின் நிதியுதவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களும் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாறு நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள தகுதியுடைய சுமார் 3.34 மில்லியன் குடும்பங்களைள் இனங்காண்பட்டுள்ளன. இதற்காக மாதமொன்றுக்கு 4455 மில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய 3 மாதங்களுக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கு 13364 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் 2000 ரூபா வயோதிபக் கொடுப்பனவைப் பெறுவோருக்கு மேலதிகமாக 3000 ரூபா வழங்கப்படவுள்ளது. 100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான வழங்கப்படும் 5000 ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபா வழங்கப்படவுள்ளது.

முதியோர் கொடுப்பனவிற்காக விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். வலுவிழந்தோருக்கு வழங்கப்படும் 5000 ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபா வழங்கப்படவுள்ளது. இதனைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் 5000 ரூபா வழங்கப்படும்.

நீரிழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. இவர்களிலும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு 5000 ரூபா வழங்கப்படும்.

இதுவரையில் 1900 ரூபா, 3200 ரூபா, கொடுப்பனவுகளைப் பெறும் சமூர்த்தி பயனாளர்களுக்கு மேலதிகமாக 3100 ரூபாவும், 4500 ரூபா கொடுப்பனவைப் பெறுபவர்களுக்கு மேலதிகமாக 3000 ரூபாவும் வழங்கப்படும்.

இதுவரையில் 732000 குடும்பங்கள் சமூர்த்தி கொடுப்பனவை வழங்குமாறு கோரியுள்ளனர். இவர்களுக்கும் 3 மாதங்களுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி மற்றும் தொழிநுட்ப உதவியின் கீழ் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக 167 மில்லியன் டொலரைப் பயன்படுத்தி மேற்குறித்த பிரிவினருக்கு கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment