23 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ! நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் ! கறுப்புத் துணியால் கட்டப்பட்ட பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் ! சர்வதேசத்திலும் நிறுவப்பட்ட கோட்டா கோ கம கிராமம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

23 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ! நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் ! கறுப்புத் துணியால் கட்டப்பட்ட பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் ! சர்வதேசத்திலும் நிறுவப்பட்ட கோட்டா கோ கம கிராமம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் மற்றும் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு நிறத்துணியால் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்றையதினம் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்களும், முற்போக்கு சிந்தனையுடைய களைஞர்களும் அதில் கலந்து கொண்டனர்.

'மக்கள் எழுச்சியில் கலைஞர்கள்' என்ற தொனிப்பொருளில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்தோடு நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல பல்கலைக்கழகங்களிலுமுள்ள மருத்துவ பீட மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் தகவல் தொழிநுட்ப துறைசார் நிபுணர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அத்தோடு மட்டக்களப்பிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களுடன் தொடர்புடையவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பட்ட இடத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் மீண்டும் அவற்றை அங்கு காட்சிப்படுத்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதே போன்று அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

நேற்றையதினம் குறித்த ஆர்ப்பாட்டத்திலும் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கண்டி நகரிலும் காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய காலி முகத்திடல் போராட்டத்தில் வடக்கு , கிழக்கைச் சேர்ந்த பெண்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

கோட்டா கோ கம எனும் கிராமமொன்று முதல் முறையாக சர்வதேச ரீதியிலும் நிறுவப்பட்டுள்ளது. குறித்த கிராமம் லண்டனில் நிறுவப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடற்கரை பகுதியை சுத்தம் செய்து குப்பைகளை சேகரித்தமை அனைவரையும் ஈர்த்தது.

No comments:

Post a Comment