தான் கல்வி கற்கும் ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி பலரைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து அந்தப் பாடசாலைக்கு எழுத்து வடிவ செய்தியொன்றை அனுப்பிய 10 வயது மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து இன்று திங்கட்கிழமை (30.5.2022) தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் பாடசாலையொன்றில் மாணவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டை நடத்தி 19 மாணவர்களையும் இரு ஆசிரியர்களையும் படுகொலை செய்த சம்பவத்திற்கு ஒரு சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேப் கோரல் பிராந்தியத்திலுள்ள பட்றியட் ஆரம்பப் பாடசாலையில் 5 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு படுகொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து பிராந்திய பாதுகாப்புத் தலைவர் அந்தப் பாடசாலையிலுள்ள அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அச்சுறுத்தலை போலியான அச்சுறுத்தலொன்றாகக் கருதும் பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment