அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஜே.வி.பி. உள்ளிட்ட சில எதிர்த்தரப்பு அடிப்படைவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையாகவே ஜனாதிபதியின் இல்லத்தின் மீதான தாக்குதலை குறிப்பிட முடியுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய சொத்துக்களுக்கும் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது, இறுதிவரை ஜனாதிபதி பொறுமையைக் கடைப்பிடித்துள்ளாரென தெரிவித்த அமைச்சர், குழப்ப நிலை கட்டுக்கடங்காமல் போகவே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள நேர்ந்ததென்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது இயல்பானது. அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நன்மை பயப்பனவாக அமைய வேண்டுமே தவிர வன்முறையாகவோ தேசிய சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறுகிய அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சில அடிப்படைவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டது. மக்களை பகடைக் காய்களாக பாவித்து அடிப்படை அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததையே காணமுடிந்தது.
நாட்டு மக்களுக்கு பிரச்சினைகளுள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நாட்டில் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடி நிலை காணப்படுகிறது. எனினும் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கன்றி அவர்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே சில தரப்பினர் செயற்பட்டனர் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
நேற்றைய இந்த மோசமான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் வேட்பாளர் ஒருவர் உட்பட அவர்களது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திலும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தேசியப் பட்டியல் உறுப்பினரொருவரும் சம்பந்தப்பட்டிருந்ததைக் குறிப்பிட முடியும்.
88, 89 காலகட்டங்களிலும் அவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக தேசிய வளங்களுக்கு சேதம் விளைவிப்பதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டனர்.
இந்த மோசமான சம்பவத்தின் போதும் ஜனாதிபதி இறுதிவரை பொறுமை காத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வாகனங்களுக்கு சேதமேற்படுத்தி வீட்டுக்கும் சேதம் ஏற்படுத்த முனைந்தபோதே பொலிஸாரும் இராணுவத்தினரும் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட நேர்ந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைக்கும் வகையிலேயே கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அடிப்படைவாதிகளின் தலையீட்டால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறைகளின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இத்தகைய அடிப்படைவாதிகளை நாம் எந்தவித இன, மத சமூகத்தோடும் ஒப்பிட்டுக்கூறவில்லை. இவ்வாறான வன்முறைகளை நடத்தி சிலரது சடலங்களை பார்ப்பதே அவர்களின் நோக்கமாகும்.
சம்பவம் நடந்தபோது ஜனாதிபதி வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். இறுதிவரை அவர் பொறுமை காத்துள்ளார். ஜனநாயகத்துக்கும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள ஜனாதிபதி மீது பாதிப்பு ஏற்படும் போது இராணுவத்தினர் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இறுதிச் சந்தர்ப்பத்திலேயே அவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனரென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment