பொருளாதார நெருக்கடியையடுத்து அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில், நேற்றையதினம் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் இராணுவ உடையணிந்து முகமூடிகளுடன் ஆயுதமேந்திய சிலர் வருகை தந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறு வந்தவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான காணொளிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, குறித்த சர்ச்சை தொடர்பாக விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் இரு மோட்டார் சைக்கிள்கள் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி இடப்பட்ட வீதித் தடையை அண்மித்த போது, அதில் வந்த இராணுவத்தினரிடம் தவறாக நடந்து கொண்ட இரு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர் இராணுவத் தளபதிக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment