நாட்டு மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே தற்போது நாடு முழுவதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு சாத்தியமான ஒரே தீர்வு என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுறு பாலபட்டபெந்தி ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சில தனி நபர்களது சொத்துக்களை குறி வைத்து வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்து விடுவதையும் அவர்களது வீடுகள் உட்பட தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் இலக்காக கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் வழிநடத்தப்படுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவதானித்துள்ளது.
அத்தகைய நடவடிக்கைகள் குற்றச் செயல்களாகும் என்பதுடன் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்படவும் வேண்டியவர்களாவர்.
அத்தகைய குற்றச் செயல்களை பாரபட்சமின்றி கண்டிப்பதுடன் அமைதியாக போராடுபவர்களது உரிமைகளை பாதுகாக்கும் அதேசமயம் இத்தகைய செயல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளையும் எமது சங்கம் கோருகின்றது.
போராடுவதற்கும் தங்களது கருத்துக்களை அமைதியாக வெளியிடுவதற்கானதுமான மக்களது உரிமைக்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.
இவ்வுரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு எண்ணற்ற நிகழ்வுகளில் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதற்கும் அப்பால், வெறுமனே போராட்டத்தில் பங்கேற்றதற்காக நியாமற்ற வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் நீதிமன்றிலும் பிரசன்னமாகியிருந்தனர்.
போராட்டங்களில் பங்கேற்பவர்கள் போராட்டம் அமைதியான முறையில் நடப்பதை உறுதிப்படுத்த அதிஉச்ச கவனத்தை கொண்டிருப்பதுடன் போராட்டத்தில் வன்முறையையோ அல்லது நாசகார வேலைகளையோ மேற்கொள்ள முயற்சிக்கும் நபர்கள் குறித்து மிக்க அவதானத்துடனும் இருக்க வேண்டும்.
அவசரகால நிலை பிரகடனம், சமூக வலைத்தள முடக்கம் மற்றும் மக்களது கோரிக்கைகளின் பேரில் ஏற்புடைய ஒரு தீர்வை பெறுவதிலான தோல்வி என்பன உள்ளடங்கலான அதிகாரத்திலுள்ளவர்களது நடவடிக்கைகளினாலேயே போராட்டத்தை மோசமடையச் செய்தது என்பதனையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கருத்திற்கொள்கின்றது.
மக்களது குரல்களை கேட்டு அவர்களது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதே தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு சாத்தியமான ஒரே தீர்வு என்பதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்தாகுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment