மகா நாயக்க தேரர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டால் ஆசிர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் : தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு சிலர் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது - ஓமல்பே சோபித தேரர் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

மகா நாயக்க தேரர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டால் ஆசிர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் : தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு சிலர் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது - ஓமல்பே சோபித தேரர்

(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகா நாயக்க தேரர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டால் இதுவரை வழங்கப்பட்ட ஆசிர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை அரச தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினரும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுயநல அரசியல் நோக்கில் செயற்படக் கூடாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

குறுகிய அரசியல் நோக்கிற்காக அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள், இனவாத செயற்பாடுகளுக்கு பௌத்த மதத் தலைவர்களில் ஒரு சிலர் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது எனவும் அதிருப்தி வெளியிட்டார்.

ஆயிரம் பௌத்த தேரர்களின் பங்குப்பற்றலுடன் சனிக்கிழமை (30) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற சங்கமகா பிரகடனத்திற்கான மகா சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் தவறான நிர்வாகத்தினால் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளது.

நாகரீமான முறையில் ஆடையணிந்து வெளிநாடுகளில் யாசகம் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை கருத்திற் கொண்டு நட்பு நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது.

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து தீர்வு காணவும், பிரதமர் உட்பட அமைச்சரவையை முழுமையாக பதவி நீக்குமாறும் மாகாநாயக்க தேரர்கள் கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கூட்டாக அறிவித்தனர்.

எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் கடந்த 20 ஆம் திகதி மகாநாயக்க தேரர்கள் மீணடும் ஜனாதிபதியிடம் இடைக்கால அரசாங்கத்தை வலியுறுத்தி கூட்டாக வலியுறுத்தினார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் சங்க மகா பிரகடனத்தை அறிவிக்க நேரிடும் என அறிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுவும் தற்போது இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு புறம்பாக அரச தலைவர்கள் செயற்பட்டால் இதுவரை காலமும் வழங்கிய ஆசிர்வாதம் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கவராக நிதி மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி உள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தின் மோசடியை மறைப்பதற்காகவே அமைச்சர் அலி சப்ரிக்கு முக்கிய அமைச்சு பதவிகள் ஊடாக கப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மை பின்னணி தன்மை தற்போது கட்டம் கட்டமாக வெளிவருகிறது.

தமிழ், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்ட இனவிரோதங்கள், அடக்குமுறைக்கு ஒரு சில பௌத்த மதத் தலைவர்கள் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது என்றார்.

No comments:

Post a Comment