(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தவறான அரசியல் தீர்மானம் இன்று முழு நாட்டுக்கும் தீ வைத்ததை போல் வியாபித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால் நாடும் நாட்டு மக்களும் இன்று எதிர்கொண்டுள்ள மோசமான நிலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும். நாட்டின் தற்போதைய நிலைமையை கண்டு பெருவேதனையடைகிறேன் ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் சாபத்தை அரசாங்கம் அனுபவிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (5) ஆரம்பமானதை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
கோ ஹோம் கோடா என்ற எதிர்ப்பு நான் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியிலே முன்வைத்தேன். எனது கருத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்போது கவனம் செலுத்தவில்லை.
பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத அரசியல் அனுபவம் இல்லாதவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டாம் என 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாக குறிப்பிட்டேன். எனது கருத்திற்கு அவர் மதிப்பளிக்கவில்லை. குடும்ப உறுப்பினருக்கு அரசியல் அந்தஸ்த்தினை அவர் வழங்கினார்.
நான் குறிப்பிட்ட கருத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஒரு வார காலமாக ஆதரவு வழங்கினார். பின்னர் இவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றினைந்து கொண்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தவறான தீர்மானம் இன்று முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார் ஆனால் இறுதியில் குடும்ப உறுப்பினர்களே ஆட்சியதிகாரத்தை செலுத்தினார்கள். நாட்டின் தற்போதைய நிலைமையை பார்க்கையில் மிகவும் வேதனையடைகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாய் திறந்தால் பொய் மாத்திரம் குறிப்பிடுகிறார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்க ஆதரவு வழங்கி விட்டு 20ஆவது திருத்திற்கு ஆதரவு வழங்கி தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாகியுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் சாபத்தை அரசாங்கம் தற்போது அனுபவிக்கிறது. வீதிக்கிறங்க முடியாத நிலையும், கோ ஹோம் கோத்தா என்ற எதிர்ப்பும் தீவிரமடைந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு ஆற்றிய சேவையும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment