(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாம் ஆட்சிக்கு வருவதானால் நாட்டு மக்களின் ஆணை மூலமே வருவோமே தவிர வேறு எதற்கும் சோரம் போக மாட்டோம். ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். அதனை அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (5) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் தமது தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களின் தேவைகளையும் துயரங்களையும் அரசாங்கம் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சபையில் பேசப்படும் விடயங்கள் மக்களுக்கு அவசியப்படாது.
அதேபோன்று அவசரகாலச் சட்டங்களை போட்டு மக்கள் வீதியில் இறங்குவதை தடுக்கவும் முடியாது. மக்களுக்கான இன்றைய தேவையாக இருப்பது, அவர்களது கஷ்டமான நிலைக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதாகும். மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கஷ்டங்களை தாங்க முடியாத மக்கள் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்குப் போகுமாறு வீதிகளில் இறங்கி குரல் எழுப்புகின்றனர். மக்கள் பாரிய எதிர்பார்ப்பை இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகளை முற்றாக இல்லாமலாக்கி இருக்கின்றது.
அதனாலே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோருகின்றனர். அவ்வாறான நிலையில் அரசாங்கம் அமைச்சர்களை மாற்றி மீண்டும் இந்த பயணத்தை தொடருமானால் அதற்கு எங்களால் ஆதரவளிக்க முடியாது.
அதனால் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும். மக்கள் ஆணை இல்லாமல் அதிகாரத்துக்கு வரப்போவதும் இல்லை எந்த பதவிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ளப்போவதும் இல்லை.
மேலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக் கொண்டு எவரும் தன்னிச்சையாக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
20ஆம் திருத்தம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என நான் இந்த சகையில் தெரிவித்தபோது ஆளும் தரப்பினர் எனக்கு மோசமான வார்த்தை பிரயோகத்தால் திட்டினர். ஆனால் அதன் விளைவை தற்போது அனுபவிக்க வேண்டி இருக்கின்றோம்.
அதனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க இந்த வாரத்துக்குள் பிரேரணைை கொண்டுவாருங்கள். அதற்கு நாங்கள் அனைவரும் ஆதரவளிப்போம்.
அத்துடன் மக்களின் கருத்துக்களை பெற்று மாற்றங்கள் இடம்பெற வேண்டும். தற்காலிக அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள நாம் ஒருபோதும் தயாரில்லை. அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்குமானால் அதற்கு எமது ஒத்துழைப்பை வழங்குவோம்.
No comments:
Post a Comment