உக்ரேனில் கீயவ் நகர் மீதான ரஷ்யாவின் குண்டுத் தாக்குதலில் ரேடியோ லிபர்டியின் செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ரேடியோ லிபர்ட்டியின் செய்திப்படி, செய்தியாளர் வேரா ஹைரிச் தனது வீட்டில் இருந்தபோது, அந்த கட்டடத்தை ஏவுகணை தாக்கியது. அவர் "ஒரு கனிவான, அறிவுத்திறன் மிக்க நபர். உண்மையான தொழில்முறை செய்தியாளர்" என்று பாராட்டப்பட்டவர்.
"ஒரு அற்புதமான நபர் இறந்து விட்டார்" என்று அவரது சக ஊழியர் ஒலெக்சாண்டர் டெம்சென்கோ தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா என்றும் அழைக்கப்படும் ரேடியோ லிபர்ட்டி, அமெரிக்க நிதியுதவி பெறும் நிறுவனம். வெளிவராத பல செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
முன்னதாக, கியவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, நேற்றைய ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு ஒரு உடல் மீட்கப்பட்டதாகக் கூறினார்.
இருப்பினும் கொல்லப்பட்ட நபரின் கூடுதல் விவரங்கள் அந்த நேரத்தில் தெரிவிக்கவில்லை. உக்ரேன் இலக்குகளை தாக்கியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் கட்டிடத்தின் மீதான தாக்குதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
உக்ரேனின் மத்திய கியவ் பகுதியில் நடந்த தாக்குதலில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. முன் சுவர் முழுவதும் இடிந்து, குடியிருப்புகளின் உட்புறம் உடைந்து, எரிந்தது. தடயவியல் குழுக்கள் அங்கு ஆய்வு செய்தனர்.
மீட்புப் பணியாளர்கள் நடைபாதையில் இருந்து இடிபாடுகள் மற்றும் இரும்பு குவியல்களை அகற்றி, உடல்கள் அல்லது உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளிடையே தேடினர்.
ரஷ்யாவின் தாக்குதல் இலக்கு அந்த பகுதியில் உள்ள ஆர்ட்டெம் என்ற ராணுவ தொழிற்சாலையாக இருந்திருக்கலாம்.
No comments:
Post a Comment