இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கு : அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கு : அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் (2015) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதிகள் சார்பில் அடிப்படை ஆட்சேபனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ( 29) இந்த ஆட்சேபனத்தை பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன் வைத்தார்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறிகள் ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் விஷேட தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (29) விசாரணைக்கு வந்தது.

முதலாவது நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் விசேட மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது முதல் பிரதிவாதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 10 ஆம் பிரதிவாதி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஜான் புஞ்சிஹேவா தவிற ஏனையோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகமவுடன் மன்றில் ஆஜராகினார்.

குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக, 'வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கான' ( pre trial conference) திகதியொன்றினை குறிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான கோரினார்.

இதன்போதே, இந்த வழக்கினை முன்னெடுத்து செல்ல முடியாது எனக்கூறி ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா அடிப்படை ஆட்சேபனத்தை முன் வைத்தார்.

அதே நிலைப்பாட்டை ஏனைய பிரதிவாதிகளும் முன்வைத்த நிலையில், அடிப்படை ஆட்சேபனத்தை எழுத்து மூலம் மன்றில் முன்வைக்குமாறு நீதிபதிகள் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்த நிலையில், எதிர்வரும் மே 26 ஆம் திகதி அதனை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பத்தாவது பிரதிவாதியான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி முன்னெடுத்து செல்ல மேல் மாகாண முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் அனுமதியளித்தது.

குற்றவியல் சட்டத்தின் 450 (8) ஆம் அத்தியாயத்துக்கு அமைய சட்ட மா அதிபர் சார்பில், முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, அர்ஜுன மகேந்ரன், அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகிய பிரதிவாதிகள் மன்றில் ஆஜராவதை புறக்கனிக்கும் நிலையில், அவர்கள் இல்லாமலேயே அவர்களுக்கு எதிரான குற்ரச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்நிலையிலேயே வழக்கு விசாரணைகள் மே 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment