பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அத்தோடு இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசியலில் நடைபெறும் அடுத்தடுத்த நகர்வுகள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து 90 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறும் நிலையில், பாராளுமன்றத்தை கலைப்பது உட்பட பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அனைத்து உத்தரவுகளும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பிரதமர் பதவியில் இம்ரான் கான் நீடிப்பார் என ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இம்ரான் கான் நீடிப்பது தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சரவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment