ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய குற்றங்களில் இருந்து ரஷ்யாவின் குற்றங்கள் வேறுபட்டவை அல்ல என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று (05) காணொலியில் உரையாற்றினார்.
அப்போது அவர் ரஷ்யா தனது படையெடுப்பின் போது அட்டூழியங்களை நிகழ்த்தியதாகக்கூறி சில சம்பவங்களைப் பட்டியலிட்டார்.
மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் அவரது உரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மொழி பெயர்க்கப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது, ரஷ்ய துருப்புக்கள் செய்த அட்டூழியங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து வேறுபட்டவை அல்ல. கிரெம்ளின் படைகளை போர் குற்றங்களுக்காக நீதியின் முன் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டிற்கு சேவை செய்யும் யாவரையும் தேடி வேண்டுமென்றே கொன்றது.
ரஷ்ய வீரர்களின் "சந்தோஷத்திற்காக" மக்கள் தெருவில், அவர்களின் வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டனர், கிணறுகளில் வீசப்பட்டனர், வீதியின் நடுவில் டாங்கிகளால் நசுக்கப்பட்டனர்.
ரஷ்ய வீரர்கள் உக்ரேனியர்களின் கைகால்களை வெட்டி, தொண்டையை வெட்டினர். குழந்தைகள் முன்னிலையில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
புச்சாவில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த பொதுமக்களின் படங்களை இப்போது உலகம் காண்கிறது. இது உதாரணத்துக்காக காண்பிக்கப்பட்ட ஒரு சில படங்கள்தான்.
ஜனாதிபதி புட்டினின் பிரசாரம் தனது சொந்த வெறுப்பை உக்ரேன் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கிறது.
இது உலகின் முக்கிய நிறுவனம் என்பது வெளிப்படையானது. மேலும், பாதுகாப்பு கவுன்சில் வழங்க வேண்டிய பாதுகாப்பு எங்கே என்று அவர் கேட்கிறார் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.
"எங்கே அமைதி? ஐ.நா உத்தரவாதம் அளிக்க வேண்டிய அந்த உத்தரவாதங்கள் எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புச்சாவில் நடந்ததாகக் கூறப்படும் கொலைகள் தவிர, உக்ரேனின் பிற பகுதிகளில் ரஷ்ய ராணுவம் இன்னும் என்னென்ன போர்க் குற்றங்களைச் செய்திருக்கும் என்பதை உலகம் இன்னும் பார்க்கவில்லை என்றும் ஸெலென்ஸ்கி பேசினார்.
"புவியியல் வேறுபட்டதாகவோ பலவிதப்பட்டதாகவோ இருக்கலாம், ஆனால் கொடுமை ஒன்றுதான், குற்றங்கள் ஒன்றே," என்று அவர் கூறினார்.
உக்ரைனில் நடந்த போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய ராணுவமும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தவர்களும் உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment