"மக்களின் வரிப் பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீளப்பெற வேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்." என வேலுகுமார் வலியுறுத்தினார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "நாட்டு மக்கள் தற்போது தன்னெழுச்சியாக போரடி வருகின்றனர். இன்று வீதியில் இறங்கி "போ! கோட்டா, போ!" என மக்கள் கோசம் மூலம் ராஜபக்சாக்களை வெளியேற சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது "இந்நாட்டில் பொதுமக்கள் பணம், அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது" என்கின்றார்கள். மக்களிடம் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த பணம், ஆட்சி கதிரையில் - முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் ஆகியவற்றை நாட்டுக்கு கொண்டுவந்து, அரசுடமையாக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.
எனவே, கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாட்டுக்கு கொண்டவர விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும். மக்களின் இந்த கோரிக்கையை அவசர விடயமாக கருதி, அவசர சட்ட மூலத்தின் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அப்பணம் மீள அவர்களிடம் இருந்து அரவிடப்பட வேண்டும். நாட்டின் சொத்தாக்கப்பட வேண்டும். ஆகவேதான் இந்த உயரிய சபையிலே கேட்க்கின்றேன். மக்கள் ஆணையை ஏற்று, விசேட சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுங்கள்.
அதன் மூலம் கடந்த 30 ஆண்டு காலம் அரசியல் ரீதியாக பதவி வகித்த அனைவரதும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலின் உள்ள சொத்துக்கள் பற்றி பரிசீலனை செய்யுங்கள். மோசடிகாரர்களிடம், கொள்ளையடித்த பணத்தை அரவிடுங்கள்.
இல்லையெனில், உண்மையிலேயே இந்த நாட்டிற்காக அரசியலில் இருந்து பல தியாகங்களை செய்த, பல அபிவிருத்திகளுக்கு முன்னின்ற, நல்லவர்களும் இந்த கொள்ளைக் கூட்டத்திற்குள் சேர்க்கப்படுகின்றனர்.
ஆனால் இன்றும் பாராளுமன்றத்தில் காண முடிவது, ராஜபக்சாக்களை பாதுகாப்பதற்கான நாடகமே ஆகும். பல குழுக்கள் எழுந்து, நாம் இன்று முதல் சுயாதீனமாக செயற்படுகின்றோம் என்கின்றார்கள். ஆனால் ஆளும் தரப்பின் ஆசனங்களில் இருந்து வெளியேறுவதாக இல்லை. இவ்வாறு தொடர்ந்து முழு நாட்டையும் ஏமாற்ற முடியும் என நினைக்க வேண்டாம்.
மக்களின் அதிகாரமே மக்கள் பிரதிநிதிகள் ஊடாக நாடாளுமன்றத்துக்கு பகிரப்பட்டுள்ளது. எனவே, மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றது.
அவசர சட்டமூலம் கொண்டுவந்தால் அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவேன். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்கள் கூறுவதுபோல பணத்தை கொண்டுவந்தால் அது இடைக்கால நிவாரணமாகவும் அமையலாம்." என்றார்.
No comments:
Post a Comment