(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மக்களின் அமைதி வழி போராட்டம் ஆளும் தரப்பின் உறுப்பினர்களை மாத்திரம் இலக்காக கொண்டுள்ளமை அவதானத்திற்குரியது. மக்களின் போராட்டம என குறிப்பிட்டுக் கொண்டு திட்டமிட்ட வகையில் தவறான நோக்கங்களுடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ்மா அதிபர் இரட்டை வேடம் போடுகிறார். போராட்டங்களை முடக்க ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது உச்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் இல்லாவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (5) ஆரம்பமானதை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்றம், ஜனாதிபதித் தேர்தல்,பொதுத் தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன். 69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். உரம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானம் முற்றிலும் தவறானது. விவசாயிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை சுட்டிக்காட்டி இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டு மக்கள் தன்னிச்சையான முறையில் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என குறிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களின் அமைதி வழிப் போராட்டம் தற்போது அரசியல் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.
5 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ளார்கள். மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக செயற்படுவார்களாயின் ஏன் என் வீட்டின் மீது மாத்திரம் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் மறுபுறம் ஆளும் தரப்பினர்களின் வீட்டை மாத்திரம் முற்றுகையிட முயற்சிக்கிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எனது வீட்டை முற்றுகையிடவுள்ளார்கள் தேசிய புலனாய்வு பிரிவு கடந்த 3ஆம் திகதி என்னிடம் அறிக்கை சமர்பித்தது. அதில் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட பல அரசியல் செயற்பாட்டு கட்சிகளின் பெயர் குறிப்பிடப்பட்டது. பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும' 10 பொலிஸார் மாத்திரமே பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
என் வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில் பலமுறை அழைப்பினை ஏற்படுத்தினேன். இருப்பினும் அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை. தற்போதைய நிலையில் பொலிஸ்மா அதிபர் இரட்டை வேடம் போடுகிறார். ஜனாதிபதி பொலிஸ்மா அதிபரை பதவி நீக்க வேண்டும்.
அமைதி வழிப் போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தவறான நோக்கத்தடன் போராட்டங்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது உச்ச அதிகாரத்தை பயன்படுத்தி போராட்டங்களை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.
அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் தற்போதைய நெருக்கடி நிலைக்கு பிரதான காரணியாக காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் மக்களின் நிலைப்பாட்டிற்கும், கருத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். விவசாய கொள்கையில் விரைவாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment