(நா.தனுஜா)
கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இளம் ஊடகவியலாளரும், சமூக வலைத்தள செயற்பாட்டாளரும் அரசாங்கத்திற்கு எதிரான பேஸ்புக் பக்கமொன்றை நடத்தி வந்தவருமான அநிருத்த முகத்துவாரக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கெதிராக குற்றவியல் சட்டக் கோவையின் 120 ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஊடகவியலாளர் அநிருத்த பண்டார, முகத்துவாரப் பொலிஸார் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் நேற்றுமுன்தினம் இரவு கடத்தப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'கோ ஹோம் கோட்டா' (வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா) என்ற பிரசாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த அநிருத்த பண்டார, நாளையதினம் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் மக்களனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து வந்தார்.
எனவே அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தமைக்காக அவர் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அநிருத்த பண்டார தொடர்பில் முகத்துவாரப் பொலிஸ் நிலையத்தில் விசாரித்தபோது, தமது காவலில் அத்தகைய நபரொருவர் இல்லை என்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இவ்விடயம் குறித்து இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்தது. அதன்பிரகாரம் இவ்விடயத்தை ஆராய்ந்து பார்த்த ஆணைக்குழு, அநிருத்த பண்டார பொலிஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்திடம் உறுதிப்படுத்தியது.
'அநிருத்த பண்டார தமது காவலின் கீழ் இருப்பதாக முகத்துவார குற்றத் தடுப்புப் பிரிவு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது' என்று இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தின் செயலாளர் தரிந்து ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் இவ்விடயத்தை உறுதிசெய்திருப்பதுடன், நேற்றையதினம் அநிருத்த பண்டாரவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருப்பதாக பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு 'கோ ஹோம் கோட்டா' (வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா) என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை நடத்தியமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
'அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுதல் அல்லது தூண்ட முயற்சிப்பதைக் குற்றமாக வரையறுத்திருக்கக் கூடிய குற்றவியல் சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவின் கீழ் அவருக்கெதிராக வழக்குப்பதிவு செய்யப்படும்' என்று பொலிஸார் கூறியதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் மனுஷ நாணயக்கார, 'நாம் இதற்கெதிராகப் போராடுவோம். அவர்களால் இவ்வாறு நபர்களைக் கைதுசெய்யமுடியாது' என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment