போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது - எஸ்.எம்.சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது - எஸ்.எம்.சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கும். அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல்களினால் போராட்டம் தீவிரமடைகிறது. என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய சேவைத்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைக்கு தீர்வு காணுமாறு உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அவை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் நாட்டு மக்களை வீதிக்கிறக்கி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறார்கள். போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சேதனப்பசளை கொள்கைத் திட்டத்தை விரைவாக மாற்றியமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய விசேட திட்டங்களை செயற்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளோம். நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு சேதனப்பசளைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தரப்பினரது தவறான செயற்பாடுகளினால் சேதனப்பசளைத் திட்டம் குளறுபடியாக்கபட்டுள்ளது.

நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல்களினால் போராட்டம் தீவிரமடைகிறது என்றார்.

No comments:

Post a Comment