நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (29) மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் தராகி சிவராம் அவர்களின் 17 ஆவது நினைவு நிகழ்வும், நீதி கோரிய போராட்டமும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள், கிழக்கு ஊடகவியலாளர்ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவதிரன், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், சிவில்செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அமரர் சிவராம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிவராம் அவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வேண்டிய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களை நினைவு கூரும் முகமான நிகழ்வில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம். இன்று வரைக்கும் இப்படுகொலை தொடர்பிலான நீதி கிடைக்கப்படவில்லை.
கொழும்பிலே கடத்தப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயமான பாராளுமன்றத்திற்குப் பின்னால் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவ்வாறு யாரும் கேள்வி கேட்க முடியாத கொடூரமான நிகழ்வுகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நடந்திருக்கின்றது.
அதிலே அண்ணன் சிவராம் அவர்கள் மிகவும் முக்கியமானவர். தமிழ்த் தேசியம் பற்றி பலவிதமான கட்டுரைகள் ஆங்கில மொழியிலும் தொடர்ச்சியாக எழுதி எமது பிரச்சனையை உலகிற்கு அறிவித்ததில் அவர் மிக முக்கியமானவர்.
அவரை அரச அனுசரணையோடு கடத்திப் படுகொலை செய்திருந்தார்கள். இன்று வரைக்கும் அதற்குரிய ஒழுங்கான விசாரணையோ நீதியோ செய்யப்படவில்லை. அதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று இங்கே போராட்டம் நடைபெறுகின்றது.
இந்தப் போராட்டம் நடைபெறுகின்ற அதேவேளை இலங்கை பூராகவும் பாரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வியாழக்கிழமை (28) கடையடைப்பு, தொழிற்சங்கங்கள் எல்லாம் வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
தற்போது மக்கள் திரண்டு திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதியும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என போர்க் கொடியை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தென் பகுதியிலே நிகழ்கின்ற போது வடக்கிலேயும் கிழக்கிலேயும்தான் இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் பலவத்தமாக மேற்கொள்ளப்படுகின்றன.
நேற்றையதினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, வீதிகளை முடக்கக்கூடாது என்று களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பொலிசாரினால் நீதிமன்ற உத்தரவு கையளிக்கப்பட்ட அதேவேளை நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.பிரதான எதிர்க்கட்சி கண்டியில் இருந்து பாரிய ஆர்ப்பாட்டத்தினை முழு வீதியையும் மறித்தே செய்கின்றார்கள்.
அங்கே ஒரு சட்டம் இங்கே வேறு சட்டங்கள். நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பதவி விலக வேண்டும். நாட்டை இப்படியாக மிக மோசமான நிலைக்குள் தள்ளியிருப்பவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். பாராளுமன்றத்திலும், வெளியிலும் இதற்கான எமது போராட்மும் தொடரும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment